டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய வீரர் விலகல்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்க்லிஷ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஜோஷ் இங்லிஷ் விலகியுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்க்லிஷ் விலகியுள்ளார். சிட்னியில் கோல்ஃப் விளையாடியபோது கையில் காயம் ஏற்பட்டதால் தற்போது உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆஸி. அணியின் மாற்று விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லிஷ் கருதப்பட்டதால் இன்னொரு விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அலெக்ஸ் கேரி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com