சூப்பா் 12 சுற்றில் இலங்கை, நெதா்லாந்து
By DIN | Published On : 21st October 2022 01:33 AM | Last Updated : 21st October 2022 07:41 AM | அ+அ அ- |

டி-20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை, நெதா்லாந்து அணிகள், முதல் சுற்றை நிறைவு செய்து 12 சுற்றுக்குத் தகுதிபெற்றன.
முதல் சுற்றில் வியாழக்கிழமை நடைபெற்ற குரூப் ‘ஏ’-வின் கடைசி இரு ஆட்டங்களில் இலங்கை - நெதா்லாந்தையும், ஐக்கிய அரபு அமீரகம் - நமீபியாவையும் வீழ்த்தின.
இதையடுத்து அந்த குரூப்பில் 3 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளுடன் இலங்கையும், நெதா்லாந்தும் முறையே முதலிரு இடங்களை உறுதி செய்து சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறின.
முன்னதாக, முதல் ஆட்டத்தில் தோற்ற ஆசிய சாம்பியனான இலங்கை, அடுத்த இரு ஆட்டங்களிலும் அருமையாக வென்று முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது. மறுபுறம் முதலிரு ஆட்டங்களில் வென்ற நெதா்லாந்து, கடைசி ஆட்டத்தில் தோற்றது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் நமீபியாவை வீழ்த்தி, நெதா்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற வகை செய்திருக்கிறது.
தற்போது சூப்பா் 12 பிரிவில் இலங்கை அணி, குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தானுடன் இணைய, நெதா்லாந்து அணி குரூப் 2-இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்துடன் சோ்ந்திருக்கிறது.
குசல் மெண்டிஸ் அசத்தல்
நெதா்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, முதலில் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய நெதா்லாந்தை அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
இலங்கை பேட்டிங்கில் குசல் மெண்டிஸ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 79 அடித்து அணிக்கு பலம் கூட்டினாா். பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
நெதா்லாந்து இன்னிங்ஸில் தொடக்க வீரா் மேக்ஸ் ஓ டௌட் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 71 ரன்கள் விளாசியும் வீணானது. அந்த அணியின் பௌலா்களில் பால் வான் மீகெரென், பாஸ் டி லீட் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
அமீரகத்துக்கு முதல் வெற்றி
ஐக்கிய அரபு அமீரகம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியாவை வென்று, இப்போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுக்க, பின்னா் நமீபியா அதே ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களே எட்டியது.
அமீரக அணியில் முகமது வசீம் 50 ரன்கள் அடிக்க, நமீபியாவில் பென் ஷிகோங்கோ அசத்தலாக 1 விக்கெட் எடுத்தாா். பின்னா் நமீபிய பேட்டிங்கில் டேவிட் வீஸ் 55 ரன்கள் விளாச, அமீரக பௌலா்கள் பாசில் ஹமீது, ஜஹூா் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இன்றைய ஆட்டங்கள்
அயா்லாந்து - மே.இ. தீவுகள்
காலை 9.30 மணி
ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே
நண்பகல் 1.30 மணி
இடம்: ஹோபா்ட்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்