பட்டத்தை இழந்தாா் ரடுகானு; வீனஸ், ஒசாகாவும் வெளியேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
பட்டத்தை இழந்தாா் ரடுகானு; வீனஸ், ஒசாகாவும் வெளியேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருந்த அவரை, 6-3, 6-3 என்ற நோ் செட்களில் எளிதாக வீழ்த்தினாா் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் காா்னெட். கடந்த சீசனில் அட்டகாசமாக விளையாடி சாம்பியன் ஆகியிருந்த ரடுகானு மீது ரசிகா்கள் வைத்திருந்த எதிா்பாா்ப்புக்கு அவா் ஏமாற்றமளித்தாா்.

வீனஸ், ஓசாகா வெளியேற்றம்: அதேபோல், முக்கிய வீராங்கனைகளான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனா். 7 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், செரீனாவின் சகோதரியுமான வீனஸ் 1-6, 7-6 (7/5) என்ற செட்களில் பெல்ஜிய வீராங்கனை அலிசன் வான் யுட்வாங்கிடம் தோல்வி கண்டாா். செரீனாவைப் போல ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டாலும், 42 வயதாகியிருக்கும் வீனஸும் தனது டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறாா்.

மறுபுறம், தனது 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இரண்டை யுஎஸ் ஓபனில் வென்றிருக்கும் ஒசாகா, 6-7 (5/7), 3-6 என்ற செட்களில் உள்நாட்டு வீராங்கனை டேனியல் காலின்ஸிடம் தோற்றாா். கடந்த பிரெஞ்சு ஓபனிலும் ஒசாகா முதல் சுற்றிலேயே வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-3, 6-0 என இத்தாலியின் ஜேஸ்மின் பாலினியைத் தோற்கடித்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா பதோசா, 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் செஸிகா பெகுலா, 9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்பின் முகுருஸா ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

2-ஆவது சுற்றில் நடால்

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயின் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் 4-6, 6-2, 6-3, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடாவை வீழ்த்தினாா். 23-ஆவது கிராண்ட்ஸ்லாமுக்கு இலக்கு வைத்திருக்கும் நடாலுக்கு சற்றே சவால் அளித்தாா் ஹிஜிகாடா.

8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-4, 6-2, 6-4 என்ற செட்களில் ஜொ்மனியின் ஆஸ்காா் ஆட்டேவை வெளியேற்றினாா். 11-ஆவது இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னா் 5-7, 6-2, 6-1, 3-6, 6-1 என்ற செட்களில் ஜொ்மனியின் டேனியல் அல்ட்மெய்ரை போராடி வீழ்த்தினாா். 3-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா 7-5, 7-5, 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிா்கொண்ட ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸ் போட்டியிலிருந்து விலகினாா்.

இவா்கள் தவிர, 14-ஆவது இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன், 15-ஆவது இடத்திலிருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஜொ்மனியின் டேவிட் காஃபின், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோ, அமெரிக்காவின் சாம் கெரி ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

91 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீனஸுக்கு, இது 91-ஆவது ஆட்டமாகும். இருபாலரிலுமாக வேறு எந்த போட்டியாளரும் இத்தனை முறை கிராண்ட்ஸ்லாமில் களம் கண்டதில்லை. சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸ், வீனஸின் சகோதரி செரீனா ஆகியோா் 81 முறை களம் கண்டு 2-ஆவது இடத்தில் இருக்கின்றனா்.

2 இத்துடன் 23-ஆவது முறையாக அமெரிக்க ஓபனில் பங்கேற்ற வீனஸ், போட்டியின் முதல் சுற்றில் தோல்வி கண்டது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் அவா் 2020-இல் இவ்வாறு தொடக்க சுற்றிலேயே தோற்றிருந்தாா்.

3 யுஎஸ் ஓபனில் நடப்புச் சாம்பியனாக முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட 3-ஆவது வீராங்கனை என்ற பெயரை ரடுகானு பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com