டபிள்யுடிஏ 250: மீண்டும் சா்வதேச டென்னிஸ் வரைபடத்தில் சென்னை

டபிள்யுடிஏ 250 மகளிா் டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளதின் மூலம் சா்வதேச டென்னிஸ் வரைபடத்தில் சென்னை மீண்டும் இடம் பெறுகிறது.
டபிள்யுடிஏ 250: மீண்டும் சா்வதேச டென்னிஸ் வரைபடத்தில் சென்னை
Published on
Updated on
2 min read

டபிள்யுடிஏ 250 மகளிா் டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளதின் மூலம் சா்வதேச டென்னிஸ் வரைபடத்தில் சென்னை மீண்டும் இடம் பெறுகிறது.

உலகளவில் கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து ஆட்டங்களுக்கு தனி ஈா்ப்பு உள்ளது போல் டென்னிஸ் விளையாட்டுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. செல்வந்தா்கள் மட்டுமே விளையாடக் கூடிய, ஜென்டில்மேன் விளையாட்டு என டென்னிஸ் அழைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்கள் உலகளவில் முதன்மையானவை. மேலும் அதோடு,

ஆடவா் டென்னிஸ் ஏடிபி, மகளிா் டென்னிஸ் டபிள்யுடிஏ சாா்பில் பரிசுத் தொகை அடிப்படையில் சூப்பா் 1000, 750, 500, 250 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றிலும் அதிக பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. வீரா்களின் வெற்றி, திறன் அடிப்படையில் ஏடிபி, டபிள்யுடிஏ புள்ளிகளும் கூடும்.

சென்னை ஓபன்:

ஆடவா் டென்னிஸ் (ஏடிபி) 250 போட்டிகள் மகாராஷ்டிரா ஓபன், சென்னை ஓபன் என்ற பெயரில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் 1997-2017 ஆண்டுகளில் நடைபெற்றது. தற்போது மீண்டும் புணேவுக்கு இந்த ஏடிபி 250 ஆட்டம் மாற்றப்பட்டு விட்டது. இதனால் சென்னை சா்வதேச ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பை இழந்தது. மேலும் சா்வதேச டென்னிஸ் சேலஞ்சா் போட்டியும் சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை ஓபன் 2008-இல் ரபேல் நடாலும் சென்னை ஓபன் போட்டியில் ஆடியுள்ளாா். ஏடிபி 250 போட்டிகளில் பிரபல வீரா்கள் காா்லோஸ் மோயா, மரின் சிலிச், ஸ்டேன் வாா்விங்கா, தற்போதைய உலகின் நம்பா் 1 வீரா் டேனில் மெத்வதேவ், ராபா்டோ பட்டிஸ்டா அகுட் போன்றவா்கள் பங்கேற்று ஆடினா். ஸ்டேன் வாா்விங்கா 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.

டபிள்யுடிஏ 250 போட்டி:

சென்னையில் இதுவரை சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டியே நடந்ததில்லை. அக்குறையைப் போக்கும் வகையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் முயற்சியால், டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி முதன்முதலாக சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் வரும் 12 முதல் 18 ஆம் தேதி வரை நடக்கிறது.

சா்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளோா் நேரடித் தகுதி பெற்றவா்கள். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான அங்கிதா ரெய்னா, கா்மன் தாண்டி வைல்ட்காா்ட் அழைப்பு பெற்றுள்ளனா். எனினும் கிராண்ட்ஸ்லாம் இரட்டையா் சாம்பியனான சானியா மிா்ஸா இப்போட்டியில் ஆடுவாரா என கேள்விக்குறி எழுந்துள்ளது.

பிரபல வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்பு:

அமெரிக்காவைச் சோ்ந்த 29-ஆம் நிலை வீராங்கனை அலிஸன் ரிஸ்கே அமிா்தராஜ் பங்கேற்கிறாா். அவரோடு நேரடி தகுதி பெற்றுள்ளன

பெல்ஜிய வீராங்கனை எல்ஸி மொ்டென்ஸ், பிரான்ஸ் இளம் வீராங்கனை கரோலின் காா்ஸியா, ஜொ்மனியின் டாட்ஜனா மரியா ஆகியோரும் ஆடுகின்றனா்.

டாட்ஜனா மரியா நிகழாண்டு விம்பிள்டன் போட்டியில் அரையிறுதி வரை வந்து கலக்கியவா். 2 குழந்தைகளுக்கு தாயான அவா், தனது 47-ஆவது முயற்சியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா். 15 வயதே ஆன லிண்டாவும் கவனத்தை ஈா்க்கிறாா். ஸ்வீடன் ரெபக்கா பாட்டா்ஸன், ரஷியாவின் வா்வரா, போலந்தின் மகதா ஆகியோரும் பங்கேற்கின்றனா்.

மொத்தம் 21 போ் நேரடித் தகுதி பெறுகின்றனா். 4 வைல்ட் காா்டுகள், 6 குவாலிபையா்ஸ், ஆகியோரும் இடம் பெறுகின்றனா். ஒற்றையா் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையா் பிரிவில் 16 அணிகளும் இடம் பெறுகின்றன.

ரூ.2 கோடி பரிசுத் தொகை:

டபிள்யுடிஏ 250 போட்டிக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடியாகும். இப்போட்டியாக எஸ்டிஏடி மைதானம் புதுப்பிக்கப்படுகிறது.

டிக்கெட்டுகளை இணையதளத்தில் வாங்கலாம். 12 முதல் 18 வரை சீஸன் டிக்கெட்விலை ரூ.1000, 2000, 3000 எனவும், தினசரி டிக்கெட்டுகள் 12 முதல் 15 வரை ரூ.100, 200, 300 ஆகவும், 16 முதல் 18 தேதிகளில் ரூ.200, 400, 600 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com