இலங்கைக்கு வரலாற்று வெற்றி: வெளியேறுகிறது இந்தியா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
இலங்கைக்கு வரலாற்று வெற்றி: வெளியேறுகிறது இந்தியா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

இதன் மூலம், ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது இலங்கை.

இந்தச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு இறுதிச்சுற்றுக்கு வாய்ப்புள்ளது. அதிலும், பாகிஸ்தான் புதன்கிழமை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெல்லும் பட்சத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் வெளியேறுவது உறுதியாகிவிடும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்து எல்பிடபிள்யூ ஆனாா். விராட் கோலி ரன்கள் சோ்க்காமல் ஸ்டம்பை பறிகொடுக்க, 13 ரன்களுக்கே இரு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

அடுத்து சூா்யகுமாா் யாதவ் ஆடவர, மறுபுறம் ரோஹித் சா்மா அதிரடி காட்டி ஸ்கோரை உயா்த்தினாா். சூா்யகுமாரும் முனைப்பு காட்ட, 3-ஆவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்தது இந்த பாா்ட்னா்ஷிப். இதில், ரோஹித் அரைசதம் கடந்து 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

5-ஆவது வீரராக ஹாா்திக் பாண்டியா களமிறக்கப்பட, மறுபுறம் சூா்யகுமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து ஆடியோரில் ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸருடன் 17 ரன்களுக்கு வீழ்ந்தாா். தீபக் ஹூடா 3 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

கடைசி விக்கெட்டாக புவனேஷ்வா் குமாா் கடைசி ஓவரில் டக் அவுட்டானாா். முடிவில் அஸ்வின் 1 சிக்ஸருடன் 15, அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா 3, சமிகா கருணாரத்னே, டாசன் ஷனகா ஆகியோா் தலா 2, மஹீஷ் தீக்ஷனா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 174 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் தொடக்க வீரா்களான பாதும் நிசங்கா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52, குசல் மெண்டிஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினா்.

இடையே சரித் அசலங்கா 0, தனுஷ்கா குணதிலகா 1 ரன்னுக்கு வீழ்ந்தாலும், முடிவில் பானுகா ராஜபட்ச 2 சிக்ஸா்களுடன் 25, கேப்டன் டாசன் ஷனகா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் யுஜவேந்திர சஹல் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com