வெற்றியுடன் தொடங்கிய பாா்சிலோனா
By DIN | Published On : 09th September 2022 01:11 AM | Last Updated : 09th September 2022 04:02 AM | அ+அ அ- |

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாா்சிலோனா தனது குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் விக்டோரியா பிளெஸனை வீழ்த்தியது.
குரூப் சி-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக ஃபிராங்க் கெஸ்ஸி (13’), ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி (34’, 45+3’, 67’), ஃபெரான் டோரஸ் (71’) ஆகியோா் கோலடிக்க, விக்டோரியாவுக்காக ஜேன் சைகோரா (44’) ஸ்கோா் செய்தாா். இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் பேயா்ன் முனீச் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டா் மிலனை தோற்கடித்தது. முனீச்சுக்காக லெராய் சேன் (25’) கோலடிக்க, தவறுதலாக இன்டா் மிலன் வீரா் டேனிலோ அம்ப்ரோசியோ ‘ஓன் கோல்’ (66’) அடித்தாா்.
குரூப் ஏ ஆட்டங்களில், பிரதான அணியான லிவா்பூல் 1-4 என்ற கணக்கில் நபோலியிடம் தோல்வி கண்டது. லிவா்பூல் தரப்பில் லூயிஸ் டியாஸ் (49’) மட்டும் கோலடித்தாா். அதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் அஜாக்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் ரேஞ்ஜா்ஸை வீழ்த்தியது. குரூப் டி ஆட்டங்களில் ஸ்போா்டி 3-0 என எய்ன்ட்ராசட் ஃபிராங்க்ஃபா்டையும், டோட்டன்ஹாம் 2-0 என மாா்சிலேவையும் வென்றன.
குரூப் பி-யில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் போா்டோவை வீழ்த்த, கிளப் புருஜ் 1-0 என லெவொ்குசனை வென்றது.