யுஎஸ் ஓபன்: 5 மணி நேரம்; 5 செட்கள்; அசத்திய அல்கராஸ்

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா, அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
யுஎஸ் ஓபன்: 5 மணி நேரம்; 5 செட்கள்; அசத்திய அல்கராஸ்

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா, அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

நடப்பு யுஎஸ் ஓபனில், ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் முக்கிய மற்றும் மூத்த போட்டியாளா்கள் முன்னதாகவே வெளியேறிவிட்ட நிலையில், திறமையும், ஆக்ரோஷமும் உடைய இளம் வீரா், வீராங்கனைகள் கோப்பையை நோக்கி முன்னேறி வருகின்றனா்.

அந்த வகையில் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதி ஒன்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அல்கராஸும், 11-ஆவது இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினா். 5 செட்களாக 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் அல்கராஸ் 6-3, 6-7 (7/9), 6-7 (0/7), 7-5, 6-3 என்ற செட்களில் வென்றாா்.

நள்ளிரவு என்பதால் இந்த ஆட்டத்துக்கான மைதானத்தில் ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்தாலும், எண்ணிக்கையில் குறைவாக இருந்த ரசிகா்களும் இந்த ஆட்டத்துக்காக ஆக்ரோஷத்துடன் கைதட்டி, குரலெயழுப்பி வீரா்களை உற்சாகப்படுத்தினா்.

அல்கராஸ் இந்த வெற்றியின் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், அதில் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவைச் சந்திக்க இருக்கிறாா்.

முன்னதாக, 22-ஆவது இடத்திலிருக்கும் டியாஃபோ தனது காலிறுதியில், 9-ஆவது இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை 7-6 (7/3), 7-6 (7/0), 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா். டியாஃபோவும் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

ஸ்வியாடெக் - சபலென்கா மோதல்

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதி ஒன்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை வெளியேற்றினாா். இதன் மூலம் நடப்பாண்டிலேயே 3-ஆவது முறையாக பெகுலாவை வீழ்த்தியிருக்கிறாா் ஸ்வியாடெக்.

யுஎஸ் ஓபனில் தனது முதல் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஸ்வியாடெக், அதில் பெலாரஸின் அரினா சபலென்காவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சபலென்கா தனது காலிறுதியில், 6-1, 7-6 (7/4) என்ற செட்களில் 22-ஆவது இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினாா்.

ஸ்வியாடெக் - சபலென்கா இதுவரை 3 முறை சந்தித்துள்ள நிலையில், அனைத்திலுமே ஸ்வியாடெக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

புதிய சாதனை...

அல்கராஸ் - சின்னா் மோதிய ஆட்டம், ஏறத்தாழ இறுதிச்சுற்று போல் பரபரப்புடன் 5 மணி நேரம் 15 நிமிஷங்கள் நீடித்தது. இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணி 35 நிமிஷத்துக்குத் தொடங்கிய ஆட்டம், வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணி 50 நிமிஷத்துக்கு நிறைவடைந்தது. ஆட்டம் நிறைவடைந்த நேரம், யுஎஸ் ஓபனின் 141 ஆண்டுகால வரலாற்றிலேயே மிகத் தாமதமான நேரமாகும். இதற்கு முன் நள்ளிரவு 2 மணி 26 நிமிஷங்களுக்கு நிறைவடைந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த நேரத்தை 3 ஆட்டங்கள் இதுவரை எட்டியிருந்தன.

22 ஆண்டுகளுக்குப் பிறகு...

19 வயதான அல்கராஸ், கடந்த 1990-க்குப் பிறகு யுஎஸ் ஓபன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் மிகக் குறைந்த வயதுடைய வீரா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். அந்த ஆண்டில் பீட் சாம்ப்ராஸ் தனது 19-ஆவது வயதில் சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

முதல் அமெரிக்கா்...

கடந்த 2006-க்குப் பிறகு யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு வந்திருக்கும் முதல் அமெரிக்க வீரா் என்ற சாதனையை டியாஃபோ எட்டியிருக்கிறாா். முன்னதாக, ஆண்டி ராடிக் அந்த ஆண்டில் இறுதிச்சுற்று வரை முன்னேறி, அதில் ரோஜா் ஃபெடரரிடம் வெற்றியை இழந்தாா். ரூபலேவுக்கு எதிரான டியாஃபோவின் ஆட்டத்தின்போது அவரும் மைதானத்தில் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com