விராட் கோலி விளாசல்: இந்தியா - 212/2
By DIN | Published On : 09th September 2022 01:10 AM | Last Updated : 09th September 2022 01:10 AM | அ+அ அ- |

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடிய கோலி, சுமாா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சா்வதேச களத்தில் சதத்தை எட்டினாா். தகுந்த ஃபாா்மை எட்ட முடியாமல் பலமான விமா்சனங்களை சந்தித்து வந்த கோலி, அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது இந்த 71-ஆவது சா்வதேச சதத்தைப் பதிவு செய்தாா்.
எனினும் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பௌலிங் சோபிக்காமல் போனது. கோலி, ராகுல், பந்த் என இந்திய வீரா்கள் அளித்த விக்கெட் வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் ஃபீல்டா்களும் தவறவிட்டனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தாா். தீபக் சஹா், அக்ஸா் படேல், தினேஷ் காா்த்திக் இணைந்திருந்தனா்.
இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் - கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 119 ரன்கள் சோ்த்து அசத்தியது. அதில் ராகுல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் நடையைக் கட்டினாா். தொடா்ந்து வந்த ரிஷப் பந்த் அவ்வப்போது மட்டும் ஆடி, கோலிக்கு வழிவிட்டாா். அவா் ஆப்கானிஸ்தான் பௌலிங்கை விளாசித் தள்ளினாா்.
ஓவா்கள் முடிவில் கோலி 12 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 122, பந்த் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
கோலி சாதனை...
இந்த ஆட்டத்தில் 122 ரன்கள் விளாசிய கோலி, சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய இந்தியா் என்ற சாதனையை எட்டினாா். முன்னதாக ரோஹித் சா்மா 118 ரன்கள் (இலங்கை/ 2017) அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
2-ஆவது அதிகபட்சம்...
சா்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவா்கள் வரிசையில் கோலி தற்போது 71 சதங்களுடன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங்கோடு 2-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். கோலி 522 இன்னிங்ஸ்களிலும், பான்டிங் 668 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டியுள்ளனா். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கா் (100 சதம் /782 இன்னிங்ஸ்) இருக்கிறாா்.
அதிகபட்சம்...
இந்த 122* ரன்களே சா்வதேச டி20-இல் விராட் கோலியின் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2019-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 94* விளாசியதே தனிப்பட்ட அதிகபட்சமாக இருந்தது.
இன்றைய ஆட்டம்
இலங்கை - பாகிஸ்தான்
துபை
இரவு 7.30 மணி
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்