டி20 உலகக் கோப்பை: தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது ஏன்?

எதனால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பெரிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும்?
டி20 உலகக் கோப்பை: தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது ஏன்?

ஆசியக் கோப்பைப் போட்டியை வென்ற இலங்கை அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தகுதிச்சுற்றில் விளையாடி அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதான சுற்றுக்குத் தகுதி பெற முடியும். 

யாரும் எதிர்பாராத வகையில் 2022 ஆசியக் கோப்பைப் போட்டியை இலங்கை அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 

ஆசியக் கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை என்பது தெரியுமா? தகுதிச்சுற்றில் விளையாடி அதில் வென்றால் மட்டுமே பிரதான சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

ஏன்? எதனால் இப்படி ஆனது?

டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

பிரதான சுற்றுக்கு அந்த 8 அணிகளும் எப்படித் தேர்வாகின? எதனால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பெரிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும்?

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. மீதமுள்ள 6 அணிகளும் 2021 நவம்பர் 15 வரை இருந்த தரவரிசையில் அடிப்படையில் தேர்வாகின. 

2012, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, தரவரிசையில் 10-வது இடத்திலும் 2014-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி தரவரிசையில் 9-வது இடத்திலும் இருந்தன. இதனால் தான் இரு பெரிய அணிகளும் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடும். இந்த 8 அணிகளில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குத் தேர்வாகும்.

பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com