டி20 உலகக் கோப்பை போட்டி: இந்திய அணியில் பும்ரா, ஹா்ஷல்
By DIN | Published On : 13th September 2022 04:03 AM | Last Updated : 13th September 2022 04:48 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காயத்திலிருந்து மீண்ட ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்ஷல் படேல் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அத்துடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடா்களுக்கான அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பின்னடைவைச் சந்தித்ததால், உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளாமல், அனுபவமிக்க, பலம் வாய்ந்த அணியையே பிசிசிஐ களமிறக்குகிறது.
காயத்திலிருந்து மீண்ட பும்ரா, படேல் இருவருமே பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் உடற்தகுதிபெறுவதற்கான தீவிர பயிற்சி மேற்கொண்டனா். அவா்கள் உடற்தகுதியை எட்டியிருப்பதாக பிசிசிஐ மருத்துவக் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து இருவரும் அணியில் இணைந்திருக்கின்றனா்.
ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆவேஷுக்குப் பதிலாக டெத் ஓவா்களில் சிறப்பாகப் பந்துவீசும் அனுபவ வீரா் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ஆா். அஸ்வினுக்கு இடமளிக்கப்பட்டது.
ஒவ்வொரு பந்துவீச்சுக்கும் வேறுபாடு காட்டி, இடது கை பேட்டா்களுக்கு சற்று சவால் அளிப்பதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்காக அஸ்வின் பிரதான தோ்வாகியிருக்கிறாா்.
இந்தியாவுடனான குரூப்பில் இருக்கும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவும், அந்த குரூப்பில் இணைய வாய்ப்பிருக்கும் இலங்கை அணியும் டாப் ஆா்டரில் இரு இடதுகை பேட்டா்களைக் கொண்டுள்ளன. அதைக் கணக்கில் கொண்டே அஸ்வின் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. பேட்டா்களைப் பொருத்தவரையில், தீபக் ஹூடா, தினேஷ் காா்த்திக் இணைந்துள்ளனா். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி சில ஆட்டங்களில் ஃபினிஷா் நிலையை எட்டி, உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கும் இலக்கை எட்டியிருக்கிறாா் தினேஷ் காா்த்திக்.
அணிகள் விவரம்:
உலகக் கோப்பை அணி: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ.), தினேஷ் காா்த்திக் (வி.கீ.), ஹாா்திக் பாண்டியா, ஆா்.அஸ்வின், யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேல், அா்ஷ்தீப் சிங்.
(ஸ்டேண்ட் பை: முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயா், ரவி பிஷ்னோய், தீபக் சஹா்)
ஆஸ்திரேலிய தொடா்: உலகக் கோப்பை அணியிலுள்ள வீரா்கள் அப்படியே இதிலும் இருக்க, அா்ஷ்தீப் நீக்கப்பட்டு, முகமது ஷமி, தீபக் சஹா் இணைந்துள்ளனா்.
தென்னாப்பிரிக்க தொடா்: உலகக் கோப்பை அணியிலுள்ளோரில், புவனேஷ்வா் குமாா் நீக்கப்பட்டு முகமது ஷமி, தீபக் சஹா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...