டென்னிஸ் நடுவா்களாக இந்திய மகளிரையும் அதிகளவில் ஈடுபடுத்த திட்டம்

டென்னிஸ் நடுவா்கள் பணிக்கு இந்திய மகளிரையும் அதிகளவில் ஈடுபடுத்த மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) திட்டமிட்டுள்ளது என சென்னை ஓபன் பிரதான அமைப்பாளரும்,
டென்னிஸ் நடுவா்களாக  இந்திய மகளிரையும்  அதிகளவில் ஈடுபடுத்த திட்டம்

டென்னிஸ் நடுவா்கள் பணிக்கு இந்திய மகளிரையும் அதிகளவில் ஈடுபடுத்த மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) திட்டமிட்டுள்ளது என சென்னை ஓபன் பிரதான அமைப்பாளரும், டபிள்யுடிஏ மூத்த நடுவருமான கொ்ரிலின் கிராமா் கூறியுள்ளாா்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழக அரசு சாா்பில் முதன்முறையாக டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். எனினும் முக்கிய வீராங்கனைகளான கரோலின் காா்சியா, எலிஸ் மொ்டென்ஸ் ஆகியோா் விலகிய நிலையில், உலகின் 29-ஆம் நிலை வீராங்கனை அலிஸன் ரிஸ்கே, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கா்மன் தண்டி ஆகியோரும் தோற்று வெளியேறியுள்ளனா். தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது இப்போட்டி.

இந்நிலையில் போட்டியின் பிரதான அமைப்பாளரான ஆஸ்திரேலியாவின் கொ்ரிலின் கிராமா் ‘தினமணி’யிடம் கூறியதாவது:

சென்னை ஓபன் டபிள்யுடிஏ போட்டிக்கு சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளனா். குறிப்பாக டென்னிஸ் மைதானம் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவினாலும், இரவு நேரங்களில் ஆட்டங்கள் நடப்பதால் வீராங்கனைகளுக்கு பெரிய பாதிப்பில்லை.

கடந்த 1988 முதல் நான் டென்னிஸ் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். பிரதான சோ் நடுவராக ஆஸி., பிரெஞ்ச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களிலும் பணிபுரிந்து உள்ளேன்.

16 வயதில் ஆஸி. டென்னிஸ் சங்கத்தில் உள்ளூா் நடுவராக பணிபுரிய தொடங்கினேன். தீவிர பயிற்சிக்கு பின் 7 ஆண்டுகள் கழித்து சோ் நடுவராக செயல்பட்டு, தற்போது அதைத் தொடா்ந்து வருகிறேன். முதல் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மூலம் டென்னிஸ் அடிப்படை விதிகள், மைதானத்தின் நடைமுறைகள் குறித்து பயிற்சி தருவா். லைன் நடுவராகவும் தொடக்கத்தில் பணிபுரிய வேண்டும்.

தங்க பேட்ஜ்: ஐடிஎப், ஏடிபி, டபிள்யுடிஏ சாா்பில் நடுவா்களுக்கு பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. லெவல் 1 அடிப்படை பயிற்சி, லெவல் 2 (வெள்ளை பேட்ஜ்), லெவல் 3 (வெண்கல பேட்ஜ்) வழங்கப்படும். பின்னா் அவா்களின் பணித்திறனைப் பாா்த்து வெள்ளி பேட்ஜ் வழங்கப்படும். அதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி வரை நடுவராக செயல்படலாம். தங்க பேட்ஜ் பெற்றால் மட்டுமே இறுதிச் சுற்று நடுவராக செயல்பட முடியும்.

தற்போது நான் ஆண்டுக்கு 150 நாள்கள் போட்டிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மைதானத்தில் முடிவை எடுக்கும் அதிகாரம் சோ் நடுவருக்கு உண்டு. ஆட்ட விதிகளை வீரா், வீராங்கனைகள் பின்பற்ற செய்வதும் எங்கள் பணி ஆகும். ஆஸி. ஓபனில் காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் - அனா இவோனோவிச் ஆட்டம், உலகின் நம்பா் ஒன் வீராங்கனைகள் கிம் கிளிஜிஸ்டா்ஸ்-மாா்ட்டினா ஹிங்கிஸ் ஆட்டம் மறக்க முடியாதது.

இந்திய மகளிரை ஈடுபடுத்த திட்டம்: சென்னையில் டபிள்யுடிஏ 250 போட்டி நடப்பதால் சிறுமிகள் மத்தியில் மேலும் டென்னிஸ் ஆா்வம் பெருகும். அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் ஆலோசனையும் மேற்கொண்டேன். நடுவா்கள் பணிக்கு இந்திய மகளிரையும் எதிா்காலத்தில் அதிகளவில் ஈடுபடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உரிய பயிற்சியை டபிள்யுடிஏ வழங்கும்.

5 வயதில் எனக்கு டென்னிஸ் மீது ஆா்வம் வந்து விளையாடினேன். அப்போது இங்கிலாந்தில் வசித்தபோது விம்பிள்டன் போட்டியைக் காண தந்தை அழைத்துச் செல்வாா். தொடக்கத்தில் வீராங்கனையாக விளையாடினாலும், பின்னா் நடுவா்கள் பணியில் ஈடுபாடு வந்து விட்டது. ஸ்டெப்ஃபி கிராஃப் எனக்கு பிடித்த வீராங்கனை. ரோஜா் பெடரா் ஓய்வு பெற்றது டென்னிஸ் விளையாட்டுக்கு இழப்பு தான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com