நாங்கள் விளையாட்டு வீரர்கள், ரோபோட்கள் அல்ல: பிரபல வீராங்கனை சாடல்

தோற்றுவிட்டால் அவர் சரியாக முயற்சி செய்யவில்லை என்றோ அர்த்தம் இல்லை.
நாங்கள் விளையாட்டு வீரர்கள், ரோபோட்கள் அல்ல: பிரபல வீராங்கனை சாடல்

தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி என இரண்டிலும் தங்கங்கள் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். சமீபத்தில் நடைபெற்ற பெல்கிரேட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார். இந்தப் போட்டியில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா என இரு இந்தியர்கள் மட்டுமே பதக்கம் வென்றார்கள். முதல் ஆட்டத்தில் தோற்று பிறகு வெண்கலம் வென்ற வினேஷ் போகத், சமூகவலைத்தளங்களில் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டார். 

இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி தரும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் வினேஷ் போகத். அவர் கூறியதாவது:

விளையாட்டு வீரர்களும் மனிதர்கள் தாம். ஒரு போட்டி அறிவிக்கப்பட்டவுடன் எங்களால் ரோபோட்கள் போல இயங்க முடியாது. வீட்டிலிருந்து விமர்சனம் செய்பவர்கள் இந்தியாவில் மட்டும் தானா அல்லது மற்ற நாடுகளிலும் உண்டா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நபரும், தொழில்முறை வீரர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கைப் பயணத்தில் பல தடைகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் உலகம் அவர்களை விமர்சனம் செய்யாது. அவர்களுடைய துறையில் நிபுணர்கள் இருக்கிறார்கள் என எண்ணிக்கொள்ளும். ஆனால் விளையாட்டில் பலரும் தங்களை நிபுணர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரரை எப்படிப் பயிற்சியின் மூலம் முன்னேற்றுவது, வீரர்களின் முயற்சிகள், தடைகள் பற்றி தங்களுக்குத் தெரியும் என எண்ணிக்கொள்கிறார்கள். கடினமான நேரத்தில் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும், எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும் என்கிற அறிவுரைகள் தான் கிடைக்கின்றன. நாங்களுக்கு ஏன் அவர்களுக்கு ஒவ்வொரு விவரத்தையும் அளிக்க வேண்டும்? ஒரு வீரர் எப்போது விளையாட வேண்டும், விளையாடக் கூடாது.... எப்போது ஓய்வு பெற வேண்டும் போன்றவற்றைப் பற்றி அவர்கள் பேசலாம் என எண்ணுவதைப் பார்க்கும்போது அது ஊக்கமளிப்பதாக இல்லை. 

ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் அந்த வீரர் மகத்தான முறையில் முயற்சி செய்தார் என்றோ தோற்றுவிட்டால் அவர் சரியாக முயற்சி செய்யவில்லை என்றோ அர்த்தம் இல்லை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டு வீரரின் பயணத்தில் ஓர் அங்கம். ஒவ்வொரு முறையும் வீரர்கள் கடினமான முயற்சியையே வெளிப்படுத்துகிறார்கள். நாங்கள் ஒவ்வொரு முறையும் பதக்கம் வெல்லாத போது நிபுணர்களாகத் தங்களை எண்ணிக் கொள்பவர்களுக்கு எங்களுடைய உழைப்பு, முயற்சிகள் பற்றி தெரியுமா? இதேபோலத்தான் இதர நாட்டிலும் அவர்களுடைய வீரர்களை விமர்சனம் செய்கிறார்களா? சமூகவலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களுடன் இணைந்திருப்பது நல்லதாக இருந்தாலும் எதிர்மறை கருத்துகளைச் சமூகவலைத்தளங்கள் பரப்பாத காலக்கட்டம் நன்றாக இருந்தது.

என்னுடைய அன்பான சக வீரர்களுக்கு - நாம் அனைவரும் ஒரே பயணத்தில் தான் இருக்கிறோம். நம்முடைய தொடர் முயற்சிகள் மூலமாக இந்தக் கலாசாரத்தை ஒருநாள் நாம் மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com