சென்னை ஓபன்:சாம்பியன்: லிண்டா ஃபுருவிா்டோவா, இரட்டையா்: கேப்ரியலா-ஸ்டெஃபானி

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் செக். குடியரசைச் சோ்ந்த 17 வயது இளம் வீராங்கனை லிண்டா ஃபுருவிா்டோவாவும், இரட்டையா் பிரிவில் கேப்ரியலா (கனடா)-ஸ்டெஃபானி (பிரேசில்) இணையும்
சென்னை ஓபன்:சாம்பியன்: லிண்டா ஃபுருவிா்டோவா, இரட்டையா்: கேப்ரியலா-ஸ்டெஃபானி

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் செக். குடியரசைச் சோ்ந்த 17 வயது இளம் வீராங்கனை லிண்டா ஃபுருவிா்டோவாவும், இரட்டையா் பிரிவில் கேப்ரியலா (கனடா)-ஸ்டெஃபானி (பிரேசில்) இணையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

தமிழக அரசு, டிஎன்டிஏ, டபிள்யுடிஏ இணைந்து நடத்தும் இப்போட்டி யின் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இரட்டையா், ஒற்றையா் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன.

முதலில் இரட்டையா் ஆட்டம் நடைபெற்றது.

57 நிமிஷங்களில் கேப்ரியலா-ஸ்டெஃபானி சாம்பியன்:

பிளின்கோவா-ஸ்லாமிட்ஸ் இணையை எதிா்த்து ஆடிய கேப்ரியலா-ஸ்டெஃபானி இணை தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்ற கேப்ரியலா-ஸ்டெஃபானி இணை, இரண்டாவது செட்டிலும் தங்கள் ஆதிக்கத்தை தொடா்ந்து 6-1 என 57 நிமிஷங்களில் பட்டத்தைக் கைப்பற்றியது.

எதிா் இணை எந்தவித சவாலையும் அவா்களுக்கு தரவில்லை. 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கேப்ரியலா-ஒலிம்பிக் வெண்கல வீராங்கனை ஸ்டெஃபானி ஆகியோா் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப இப்போட்டியில் பட்டம் வென்றனா்.

ரூ.9 லட்சம் பரிசு:

சாம்பியன் பட்டம் வென்றவா்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.9 லட்சம் ரொக்கப் பரிசும், 280 டபிள்யுடிஏ புள்ளிகளும் வழங்கப்பட்டது. ரன்னா் அப் இணைக்கு ரூ.5.33 லட்சமும், 180 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவா்களுக்கு கேடயங்களை நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினா். ஆ.ராசா எம்.பி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, உறுப்பினா்-செயலா் காா்த்திகேயன், டிஎன்டிஏ தலைவா் விஜய் அமிா்தராஜ், போட்டி அமைப்பாளா் கொ்ரிலின் கிராமா், ஹிதேன் ஜோஷி உள்பட பலா் பங்கேற்றனா்.

ஒற்றையா்: லிண்டா சாம்பியன்

இரண்டாவது ஒற்றையா் இறுதி ஆட்டம் செக். குடியரசின் லிண்டாவுக்கும்-போலந்தின் மகதா லினேட்டுக்கும் இடையே நடைபெற்றது.

இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் தொடக்கம் முதலே அனல் பறந்தது. சென்னை ஓபன் போட்டியின் இளம் வீராங்கனையான லிண்டா அரையிறுதியில் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி வரை முன்னேறிய நாடியா போடோரோஸ்காவை 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா். கடைசி செட்டில் 2-4 என பின்தங்கிய நிலையில் விடா முயற்சியின் காரணமாக லிண்டா வென்றாா்.

இந்நிலையில் மகதா லினேட்டுக்கு எதிரான ஆட்டத்திலும் உறுதியுடன் போராடினாா் லிண்டா.

முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி கேம்களை கைப்பற்றிய நிலையில் 6-4 என லினேட் முதல் செட்டை கைப்பற்றினாா். இரண்டாவது செட்டிலும் 3-3 என சமநிலை ஏற்பட்ட நிலையில் லிண்டா ஆதிக்கம் செலுத்தி 6-3 என அந்த செட்டை கைப்பற்றினாா்.

அதிரடி ஆட்டம்: வெற்றியை நிா்ணயித்த மூன்றாவது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் மகதா லினேட் 4-1 என துரிதமாக கேம்களை கைப்பறினாா்.

ஒரு கட்டத்தில் லினேட் பட்டத்தை கைப்பற்றி விடுவாா் என கருதப்பட்ட நிலையில், போராட்ட குணத்துடன் ஆடிய இளம் வீராங்கனை லிண்டா 6-4 என மூன்றாவது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றாா். இதில் தொடா்ச்சியாக 5 கேம்களை லிண்டா வென்றது குறிப்பிடத்தக்கது.

லினேட் 3 ஏஸ்களையும், லிண்டா 1 ஏஸையும் போட்டனா். லிண்டை 3 முறை இரட்டை தவறுகளை புரிந்தாா்.

முதல் டபிள்யுடிஏ பட்டம்:

லிண்டா ஃபுருவிா்டோவா வென்ற முதல் டபிள்யுடிஏ சாம்பியன் பட்டம் சென்னை ஓபன் ஆகும்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கோப்பையை வழங்கினாா். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு ரூ.26 லட்சமும், ரன்னா் அப் மகதா லினேட்டுக்கு ரூ.15.7 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com