தொடரும் சர்ச்சை: ஒரு நகர்த்தலில் ஆட்டத்திலிருந்து விலகிய கார்ல்சன்!

ஒரு நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக கார்ல்சன் விலகியதால் செஸ் உலகில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
தொடரும் சர்ச்சை: ஒரு நகர்த்தலில் ஆட்டத்திலிருந்து விலகிய கார்ல்சன்!

ஹான்ஸ் நீமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக கார்ல்சன் விலகியதால் செஸ் உலகில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 

2-வது நாள் முடிவில் இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகைசியும் பிரக்ஞானந்தாவும் முதல் இரு இடங்களைக் கைப்பற்றியுள்ளார்கள். 17 புள்ளிகளுடன் அர்ஜுன் முதலிடத்திலும் 15 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, கார்ல்சன் ஆகியோர் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

நேற்றைய ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சன் - ஹான்ஸ் நீமன் இடையிலான ஆட்டத்தை செஸ் உலகம் ஆவலாக எதிர்பார்த்தது. காரணம் சமீபத்தில் ஹான்ஸ் நீமனுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்ற பிறகு போட்டியிலிருந்து கார்ல்சன் விலகியதால் தான். 

2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்றார். 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது ஹான்ஸ் நீமன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கார்ல்சன். அவர் இதுவரை பங்கேற்ற எந்தவொரு போட்டியிலும் இதுபோல பாதியில் விலகியதில்லை. இதனால் கார்ல்சனின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த ட்வீட்டில், அவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதில், இதுபற்றி நான் பேசினால் எனக்குப் பெரிய பிரச்னை ஏற்படும் என கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மரினோ பேசிய காணொளியை தனது ட்வீட்டுடன் சேர்த்து பகிர்ந்ததால் கார்ல்சனின் இந்த முடிவு புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இணைய வழியிலான செஸ் போட்டிகளில் ஹான்ஸ் நீமன் முறைகேடுகள் செய்து சில ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் அது தொடர்பான சந்தேகம் காரணமாக கார்ல்சன் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இதுவரை கார்ல்சன் தன்னுடைய காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் அடுத்த சில நாள்களில் ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனும் ஹான்ஸ் நீமனும் மீண்டும் மோதியதால் இந்த ஆட்டத்தை செஸ் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்திலிருந்து விலகினார் கார்ல்சன். இதனால் 2 நகர்த்தல்களுடன் விளையாடிய ஹான்ஸ் நீமன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

கார்ல்சனின் இந்த நடவடிக்கை செஸ் உலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹான்ஸ் நீமன் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து விவாதிக்கும் விதமாகவே இதுபோல செய்துள்ளார் கார்ல்சன், இருவருக்கும் இடையிலான இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என செஸ் ரசிகர்களும் வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com