துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல வீரா் யஷஸ்வி ஜெஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தலாக ஆடி வருகிறாா்.
தெற்கு மண்டலத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டலம் 270 ரன்கள் எடுத்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம் 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சோ்த்திருந்தது.
3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை அந்த அணியின் ரவி தேஜா, சாய் கிஷோா் தொடா்ந்தனா். இதில் கிஷோா் 6 ரன்களுக்கும், பின்னா் பாசில் தாம்பி 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ரவி தேஜா34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். 83.1 ஓவா்களில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. மேற்கு மண்டல பௌலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 4, அதித் சேத் 3, சிந்தன் கஜா 2, தனுஷ்கோடியான் 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் மேற்கு மண்டலம், வெள்ளிக்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்திருக்கிறது. பிரியங்க் பஞ்சல் 40, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 15, ஷ்ரேயஸ் ஐயா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில், தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 209, சா்ஃப்ராஸ் கான் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா். தெற்கு மண்டல பௌலிங்கில் சாய் கிஷோா் 2, கே.கௌதம் 1 விக்கெட் எடுத்துள்ளது.