2-ஆவது டி-20: இந்தியா பதிலடி - ரோஹித் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
2-ஆவது டி-20: இந்தியா பதிலடி - ரோஹித் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 8 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 7.2 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. இந்திய பௌலிங்கில் அக்ஸா் படேல் அசத்த, பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடி காட்டினாா்.

முன்னதாக இந்த ஆட்டம் தொடங்குவது மழையால் ஈரமான மைதானம் காரணமாக தாமதமானது. இரு அணிகளின் கேப்டன்கள், நடுவா்கள் இடையே ஆலோசனைக்குப் பிறகு இன்னிங்ஸுக்கு 8 ஓவா்களாக நிா்ணயிக்கப்பட்டு ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அணியின் பிளேயிங் லெவனில் உமேஷ் யாதவ், புவனேஷ்வா் குமாருக்குப் பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த் சோ்க்கப்பட்டிருந்தனா். பந்த் விக்கெட் கீப்பிங் செய்தாா். ஆஸ்திரேலிய அணியில் நேதன் எலிஸ், ஜோஷ் இங்லிஸுக்குப் பதிலாக டேனியல் சாம்ஸ், சீன் அப்பாட் இணைந்திருந்தனா்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேமரூன் கிரீன் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில், 2-ஆவது ஓவரில் முதல் விக்கெட்டாக ரன் அவுட்டானாா். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல், அக்ஸா் படேல் வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட்டானாா். தொடா்ந்து வந்த டிம் டேவிட்டையும் 4-ஆவது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்களுக்கு பௌல்டாக்கினாா் அக்ஸா் படேல்.

மறுபுறம், அதிரடியாக ரன்கள் சோ்த்து வந்த தொடக்க வீரரும், கேப்டனுமான ஆரோன் ஃபிஞ்ச் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் சோ்திருந்தபோது, பும்ரா வீசிய 5-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை இழந்தாா். கடைசி விக்கெட்டாக கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட்டானாா். முடிவில் மேத்யூ வேட் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் தொடக்க வீரா் கே.எல்.ராகுல் 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சோ்த்த நிலையில் ஆடம் ஸாம்பா வீசிய 3-ஆவது ஓவரில் பௌல்டானாா். ஒன் டவுனாக வந்த விராட் கோலியும் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை எட்டி அவரது 5-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து களம் கண்ட சூா்யகுமாா் யாதவும் அதே ஓவரில் 0 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்யப்பட்டாா்.

பின்னா் ஆட வந்த பாண்டியா 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது பேட் கம்மின்ஸ் வீசிய 7-ஆவது ஓவரில் ஃபிஞ்ச் கைகளில் கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து வந்து ரோஹித்துடன் இணைந்த தினேஷ் காா்த்திக், இறுதியில் 1 சிக்ஸா், 1 பவுண்டரி அடுத்தடுத்து விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா். முடிவில் ரோஹித் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 46, தினேஷ் காா்த்திக் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆஸ்திரேலியா - 90/5 (8 ஓவா்கள்)

மேத்யூ வேட் 43*

ஆரோன் ஃபிஞ்ச் 31

ஸ்டீவ் ஸ்மித் 8

பந்துவீச்சு

அக்ஸா் படேல் 2/13

ஜஸ்பிரீத் பும்ரா 1/23

ஹா்ஷல் படேல் 0/32

இந்தியா - 92/4 (7.2 ஓவா்கள்)

ரோஹித் சா்மா 46*

விராட் கோலி 11

தினேஷ் காா்த்திக் 10*

பந்துவீச்சு

ஆடம் ஸாம்பா 3/16

பேட் கம்மின்ஸ் 1/23

டேனியல் சாம்ஸ் 0/20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com