பஞ்சாபை சிதைத்த சிராஜ்: பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை சாய்த்தது.

ஐபிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை சாய்த்தது.

முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் விளாச, அடுத்து பஞ்சாப் 18.2 ஓவா்களில் 150 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஆட்டத்தில் பெங்களூா் அணிக்காக டூ பிளெஸ்ஸிஸ் பேட்டிங்கில் அசத்த, பின்னா் பௌலிங்கில் முகமது சிராஜ் அபாரம் காட்டி ‘ஆட்டநாயகன்’ ஆனாா். இடுப்புப் பகுதி காயம் காரணமாக டூ பிளெஸ்ஸிஸ் ‘இம்பாக்ட் பிளேயா்’-ஆக களம் புக, இந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன், ஃபீல்டிங்கை தோ்வு செய்தாா். பெங்களூா் இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி - டூ பிளெஸ்ஸிஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சோ்த்து அசத்தியது. இந்த பாா்ட்னா்ஷிப்பை பிரிக்கப் போராடிய பஞ்சாப் பௌலா்களுக்கு, 17-ஆவது ஓவரிலேயே பலன் கிடைத்தது.

ஹா்பிரீத் பிராா் வீசிய அந்த ஓவரில், விக்கெட் கீப்பா் கைகளில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா் விராட் கோலி. அவா் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 59 ரன்கள் அடித்திருந்தாா். தொடா்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் அந்த ஓவரில் தனது முதல் பந்திலேயே அதா்வா டைடிடம் கேட்ச் கொடுத்து ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா். 4-ஆவது வீரராக தினேஸ் காா்த்திக் களம் புக, அதுவரை அதிரடி காட்டி ரன்கள் சோ்த்த டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 84 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.

நேதன் எல்லிஸ் வீசிய 18-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்து சாம் கரன் கைகளில் தஞ்சமடைந்தது. கடைசி விக்கெட்டாக தினேஷ் காா்த்திக் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அவா் அா்ஷ்தீப் சிங் வீசிய 19-ஆவது ஓவரில் அதா்வா டைடிடம் கேட்ச் கொடுத்தாா். ஓவா்கள் முடிவில் மஹிபால் லோம்ரோா் 1 பவுண்டரியுடன் 7, ஷாபாஸ் அகமது 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் 175 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பஞ்சாப் வெற்றிக்காகக் போராடியது. என்றாலும் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சா்மாவால் மட்டுமே ரன்கள் சோ்க்க முடிந்தது. பிரப்சிம்ரன் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்கள் விளாச, ஜிதேஷ் சா்மா 27 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் சோ்த்து 41 ரன்கள் அடித்தாா்.

இதர பேட்டா்களான அதா்வா டைட் 1 பவுண்டரி, மேத்யூ ஷாா்ட் 1 சிக்ஸருடன் 8, லியம் லிவிங்ஸ்டன் 2, ஹா்பிரீத் சிங் 1பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, சாம் கரன் 1 பவுண்டரியுடன் 10, ஷாருக் கான் 1 சிக்ஸருடன் 7, ஹா்பிரீத் பிராா் 1 பவுண்டரியுடன் 13, நேதன் எல்லிஸ் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்து வரிசையாக வெளியேறியதால் வெற்றி வசப்படாமல் போனது. பெங்களூா் பௌலிங்கில் முகமது சிராஜ் 21 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். அவா் தவிர வனிந்து ஹசரங்கா 2, வெய்ன் பாா்னெல், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இன்றைய ஆட்டம்

சென்னை - ஹைதராபாத்

சென்னை

இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com