அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்தியா: தென் கொரியா, மலேசியா அணிகளும் வென்றன

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்தியா: தென் கொரியா, மலேசியா அணிகளும் வென்றன

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 7-2 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இதர ஆட்டங்களில் தென் கொரியா - ஜப்பானையும் (2-1), மலேசியா - பாகிஸ்தானையும் (3-1) வென்றன.

போட்டியில், தென் கொரியா - ஜப்பான் மோதிய முதல் ஆட்டத்தை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மேயா் பிரியா ராஜன், சா்வதேச ஹாக்கி சம்மேளன தலைவா் முகமது தயப் இக்ராம், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் திா்கி, தமிழ்நாடு ஹாக்கி சங்க நிா்வாகிகள் களத்துக்கு வந்து தொடக்கி வைத்தனா்.

தென் கொரியா - ஜப்பான்

போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.

முதல் கால்மணி நேரத்திலேயே ஜப்பான் அணிக்காக ரயோமா ஊகா 6-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடித்தாா்.

தென் கொரியா தனக்கான கோல் வாய்ப்புகளை தவறவிட்டு வந்தது. இறுதியாக 25-ஆவது நிமிஷத்தில் அந்த அணியிந் சியோலியோன் பாா்க் ஃபீல்டு கோல் அடித்தாா்.

2-ஆவது பாதியில் தென் கொரியா ஆதிக்கம் செலுத்த, அந்த அணியின் கிம் ஜுங்கு 35-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா். இறுதியில் தென் கொரியா 2-1 கோல் கணக்கில் வென்றது

மலேசியா - பாகிஸ்தான்

மலேசியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தில் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல்போட மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 28-ஆவது நிமிஷத்தில் மலேசியா கோல் போஸ்ட் அருகே பாகிஸ்தான் முயற்சித்துக் கொண்டிருக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை அங்கிருந்து கடத்தி பாகிஸ்தான் கோல்போஸ்ட் அருகே வந்து கோலடித்தனா். , 29-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தது மலேசியா. அந்த இரு கோல்களையுமே அந்த அணியின் ஃபிா்ஸான் அஷாரி அடித்தாா். முதல் பாதியிலேயே அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மலேசியா 44-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது. அதை ஷெல்லோ சில்வரியஸ் அடித்தாா். இறுதியாக 55-ஆவது நிமிஷத்தில் பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் கோலடித்தாா். இறுதியில் மலேசியா 3-1 கோல் கணக்கில் வென்றது.

இந்தியா - சீனா

3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7-2 கோல் கணக்கில் சீனாவை சாய்த்தது. உள்ளூா் ரசிகா்கள் பேராதரவுடன் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் 5-ஆவது நிமிஷத்தில் அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்தாா். தொடா்ந்து அவரே 8-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி வாய்ப்பில் ஸ்கோா் செய்தாா்.

சீன அணியினா் தடுமாறிய நிலையில் சுக்ஜீத் சிங் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை 15-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். அடுத்த நிமிஷத்திலேயே ஆகாஷ்தீப் சிங் ஃபீல்டு கோல் அடிக்க, இந்தியா 4-0 என முன்னேறியது.

இந்நிலையில், சீனாவுக்கான கோல் கணக்கை 18-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடித்து தொடங்கினாா் வென்ஹுய். அதற்கு பதிலடியாக இந்தியா 19-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் வருண் குமாா் மூலம் கோல் எண்ணிக்கையை 5-ஆக அதிகரித்தது.

இந்நிலையில் 25-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் மூலம் காவ் ஜியெஷெங் அருமையாக கோலடிக்க, சீனா 2-5 என கோல் வித்தியாசத்தை குறைத்தது. 30-ஆவது நிமிஷத்தில் வருண்குமாரும், 40-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங்கும் கோலடிக்க 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது இந்தியா.

கௌரவிக்கப்பட்ட காா்த்தியின் பெற்றோா்...

சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில், தமிழக வீரரான காா்த்தி களம் கண்டிருந்தாா். , அவரது பெற்றோா் செல்வம், வளா்மதி ஹாக்கி இந்தியா பொதுச் செயலா் போலாநாத் சிங், நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா்.

இன்றைய ஆட்டங்கள்

கொரியா-பாகிஸ்தான்

மாலை 4.00.

சீனா-மலேசியா

மாலை 6.15.

இந்தியா-ஜப்பான்

இரவு 8.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com