பும்ரா இத்தனை நாள்கள் ஓய்வெடுத்தது நல்லது தான்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

பும்ரா இத்தனை நாள்கள் ஓய்வெடுத்தது நல்லது தான்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளது பும்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியான தொடக்கத்தைத் தரும் என  கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
Published on

காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளது பும்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியான தொடக்கத்தைத் தரும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், பும்ராவின் வருகை இந்திய அணிக்கு பலமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எம்ஆர்எஃப் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பும்ரா ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவர் காயத்திலிருந்து எவ்வளவு குணமடைந்துள்ளார் என்பதைப் பொறுத்தே அவர் மீதான எதிர்பார்ப்புகள் இருக்கும். காயம் காரணமாக அவருக்கு கிடைத்த இந்த ஓய்வு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் புத்துணச்சியாக தொடங்குவதற்கு உதவியாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் முதுகு காயம் போன்றவற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் முழு உடல் தகுதி பெற அதிக நேரம் தேவையானதே. அவர்  காயத்திலிருந்து குணமடைய எந்த அளவுக்கு உழைத்துள்ளார் என்பது அவர் பந்து வீசும்போது தெரியும்.

காயத்துக்கு பின்பு அவர் பந்துவீசி நான் பார்க்கவில்லை. காலம் தான் பதில் சொல்லும். அவர் உடல் எந்த அளவுக்குத் தயாராக உள்ளது என்பது அவருக்குத் தான் தெரியும். அவருக்கு அதிக அளவிலான அனுபவம் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக அவரை தயார் படுத்திக் கொள்வதற்கு போதுமான காலமும் உள்ளது என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவர் கடைசியாக விளையாடியிருந்தார். அண்மையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com