அவர் என்னை என்ன கூறினார் தெரியுமா? கௌதம் கம்பீர் மீது முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின்போது தன்னை சூதாட்டக்காரர் என கௌதம் கம்பீர் அழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின்போது தன்னை சூதாட்டக்காரர் என கௌதம் கம்பீர் அழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் இந்தியன் கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது  உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர்களான கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. களநடுவர்கள் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இருவரையும் இடைமறித்து அமைதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஸ்ரீசாந்த் பேசியதாவது: அவர் தொடர்ச்சியாக என்னை சூதாட்டக் காரர் எனக் கூறிக் கொண்டிருந்தார். மேலும், உனது பந்துவீச்சை எப்படி அடிக்கிறேன் பார் சுதாட்டக்காரர் எனக் கூறினார். நான் அதற்கு என்ன கூறினீர்கள் என்று கேட்டேன். நான் அவர் கூறியதை நினைத்து நகைச்சுவையாக சிரித்துக் கொண்டிருந்தேன். களநடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தபோதும், களநடுவர்களிடமும் அவர் சூதாட்டக்காரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். என்னுடைய தரப்பிலிருந்து நான் எந்த ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தவில்லை.

உண்மைக்கு ஆதரவு கொடுங்கள். அவர் பலரிடம் இதேபோன்று நடப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் ஏன் இந்த விஷயத்தைத் தொடங்கினார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் ஃபிக்ஸர் (சூதாட்டக்காரர்) எனக் கூறவில்லை. சிக்ஸர் எனக் கூறியதாக அவருக்கு ஆதரவாக சிலர் பேசுகின்றனர் என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் கடந்த 2013 ஆம் ஐபிஎல் போட்டியின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்ததும், பின்னர் உச்சநீதிமன்றம் அந்த தடைக்காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com