நியூசிலாந்து - வங்கதேசம் 2-வது டெஸ்ட்: மழையால் பாதித்த இரண்டாம் நாள் ஆட்டம்!

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக பந்துகள் வீசாமலேயே நிறைவடைந்தது.
நியூசிலாந்து - வங்கதேசம் 2-வது டெஸ்ட்: மழையால் பாதித்த இரண்டாம் நாள் ஆட்டம்!

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக பந்துகள் வீசாமலேயே நிறைவடைந்தது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 6) இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்ஸில் பேட் செய்த வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதனையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5  விக்கெட்டை  இழந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக போட்டித் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் இரண்டாம் நாள் ஆட்டம் பந்துகள் வீசப்படமாலேயே நிறைவு பெற்றது. 

நியூசிலாந்தைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலையில் உள்ள வங்கதேசம் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com