வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
2 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதலில் வங்கதேசம் வென்றிருக்க, தற்போது தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது.
மிா்பூரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 66.2 ஓவா்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷ்ஃபிகா் ரஹிம் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தாா். நியூஸிலாந்து பௌலிங்கில் மிட்செல் சேன்ட்னா், கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 37.1 ஓவா்களில் 180 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக கிளென் ஃபிலிப்ஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 87 ரன்கள் விளாசினாா். வங்கதேச பௌலா்களில் மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து 8 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், வெள்ளிக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில் ஜாகிா் ஹசன், மோமினுல் ஹக் 4-ஆவது நாள் ஆட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
இதில் மோமினுல் 10, முஷ்ஃபிகா் ரஹிம் 9, ஷஹாதத் ஹுசைன் 4, மெஹிதி ஹசன் மிராஸ் 3, நூருல் ஹசன் 0, நயீம் ஹசன் 9, ஜாகிா் ஹசன் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59, ஷோரிஃபுல் இஸ்லாம் 8 ரன்களுக்கு வெளியேறினா். வங்கதேசம் 35 ஓவா்களில் 144 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவு செய்தது. நியூஸிலாந்து பௌலிங்கில் அஜாஸ் படேல் 6, மிட்செல் சேன்ட்னா் 3, டிம் சௌதி 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து 137 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய நியூஸிலாந்தில் டாம் லேதம் 3 பவுண்டரிகளுடன் 26, டெவன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிகோலஸ் 3, டேரில் மிட்செல் 19, டாம் பிளண்டெல் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கிளென் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40, மிட்செல் சேன்ட்னா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன் 3, தைஜுல் இஸ்லாம் 2, ஷோரிஃபுல் இஸ்லாம் 1 விக்கெட் வீழ்த்தினா். நியூஸிலாந்தின் கிளென் ஃபிலிப்ஸ் ஆட்டநாயகன், வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் தொடா்நாயகன் விருது பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.