மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்: கண்ணீருடன் அறிவித்த சாக்‌ஷி மாலிக்!

இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்ததிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்: கண்ணீருடன் அறிவித்த சாக்‌ஷி மாலிக்!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது.

இதனிடையே, பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்‌ஷி மாலிக், சத்யவா்த் காடியான், பஜ்ரங் புனியா, ஜிதேந்தா் கின்ஹா உள்ளிட்ட மல்யுத்த வீரா்-வீராங்கனைகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின், பிரிஜ் பூஷண் கைது செய்யப்பட்டு பதவி விலகியதும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்,  ‘புதிய தலைவராக ஒரு பெண்தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அப்படி நிகழ்ந்தால், பாலியல் அத்துமீறல்கள் நடைபெறாது. ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் கூட ஒரு பெண் இல்லை. பிரிஜ் பூஷணின் உதவியாளரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் முழு பலத்துடன் போராடினோம். இந்தச் சண்டை தொடரும். புதிய தலைமுறை மல்யுத்த வீரர்கள் போராட வேண்டும்’ என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதுடன் தான் மல்யுத்தத்திலிருந்தே விலகுவதாகத் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

31 வயதான மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும்,  2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று 62 கிலோவுக்கான எடைப்பிரிவில் தங்கம் பதக்கமும் வென்றவர்.

மேலும், பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதும் சாக்‌ஷிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com