டபிள்யூபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக நட்சத்திர வீராங்கனை மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
டபிள்யூபிஎல் போட்டிக்காக வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன.
டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர பேட்டர்களான விராட் கோலியும் டு பிளெஸ்சிஸும் இத்தகவலை விடியோ வழியாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் தலைமை தாங்கியுள்ள மந்தனாவுக்கு ஆறு ஆட்டங்களில் வெற்றிகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் டிரையில்பிளேஸர்ஸ் அணிக்கு நான்குப் பருவங்களிலும் தலைமை தாங்கி, 2020-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆர்சிபி அணியில் எல்லீஸ் பெர்ரி, சோபி டிவைன், ஹெதர் நைட் போன்ற பல பிரபல வீராங்கனைகள் உள்ளார்கள். மார்ச் 4 அன்று, டபிள்யூபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் விளையாடவுள்ளன. மார்ச் 5 அன்று தில்லிக்கு எதிராக மோதவுள்ளது ஆர்சிபி அணி.