இது கிரிக்கெட் அல்ல: இந்திய அணியை விமர்சித்த கவாஸ்கர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தவறான முறையில் அப்பீல் செய்த இந்திய அணிக்கு...
இது கிரிக்கெட் அல்ல: இந்திய அணியை விமர்சித்த கவாஸ்கர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தவறான முறையில் அப்பீல் செய்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில் அடித்த இரட்டைச் சதத்தால் நியூசிலாந்து அணியை முதல் ஒருநாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்தார் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார் கில். 

இந்திய அணியின் இன்னிங்ஸில் பாண்டியா துரதிர்ஷ்டவசமாக 28 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரின் கிளவுஸ் உரசியதால் ஸ்டம்புகளின் பைல்ஸ் விழுந்ததாகப் பலரும் கருதிய நிலையில் பந்து உரசி விழுந்ததாக 3-வது நடுவர் கருதி அவுட் என அறிவித்தார்.

இந்நிலையில் நியூசிலாந்தின் இன்னிங்ஸில் பாண்டியா சம்பவத்தைக் கிண்டல் செய்வது போல ஒரு காரியம் செய்தார் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன். 16-வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தைத் தடுப்பாட்டம் ஆடினார் டாம் லதம். அப்போது ஸ்டம்பின் பைல்ஸ் கீழே விழுந்தது. தடுப்பாட்டம் ஆடியபோது ஸ்டம்புகளின் மீது லதமின் கால் உரசியதாக அனைவரும் கருதினார்கள். இதனால் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகியோர் நடுவரிடம் அப்பீல் செய்தார்கள். உடனே 3-வது நடுவரிடம் இவ்விஷயத்தைக் கொண்டு சென்றார்கள் கள நடுவர்கள். அப்போதுதான் இஷான் கிஷன் வேண்டுமென்றே பைல்ஸைக் கீழே தள்ளியது தெரிய வந்தது. இதனால் பேட்டருக்குச் சாதகமான தீர்ப்பை அளித்தார் 3-வது நடுவர். 

இஷான் கிஷனின் இந்தச் செயலை வர்ணனையில் கண்டித்தார் முன்னாள் வீரர் கவாஸ்கர். அவர் கூறியதாவது:

விளையாட்டாகச் செய்வது சரிதான். அதற்கு அப்பீல் செய்தது சரியான செயல் அல்ல. இந்திய அணி பேட்டிங் செய்தபோது என்ன நடந்தது என்பதை பேட்டருக்கு உணர்த்த இப்படிச் செய்தவரைக்கும் சரிதான். ஆனால் அப்பீல் செய்தது சரியல்ல. இது கிரிக்கெட் அல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com