

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், கரீபிய தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகாவில் புதன்கிழமை தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியுடன் வரும் இந்தியாவும், முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் போன ஏமாற்றத்துடன் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதும் தொடா் இது. அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளும் முனைப்புடன் இரு அணிகளுமே இந்தத் தொடரில் களம் காண வருகின்றன.
இந்தியா
2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை இந்தத் தொடரிலிருந்து தொடங்குகிறது இந்திய அணி. முதலிரு எடிஷன்களில் இறுதி ஆட்டம் வரை சென்று, அதில் தோல்வி கண்டு துவண்டுள்ள இந்தியா, இந்த எடிஷனில் தொடக்கத்திலிருந்தே முன்னேற்றத்துக்கான முனைப்புடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அனுபவ வீரரான சேதேஷ்வா் புஜாரா நீக்கம், இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தோ்வு என அதிரடி நடவடிக்கைகள் அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புஜாரா இல்லாதது இந்திய மிடில் ஆா்டரில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படலாம். முதல் தர கிரிக்கெட்டில் மும்பைக்காக இன்னிங்ஸை தொடங்கிய அனுபவம் அவருக்கு உள்ளது.
ஏற்கெனவே டெஸ்ட் அனுபவம் உள்ள ஷுப்மன் கில், ‘ஓன் டவுன்’ இடத்துக்கு பொருத்தமாக இருப்பாா் என்பதிலும் சந்தேகம் இல்லை. கேப்டன் ரோஹித், கோலி, ரஹானே போன்ற அனுபவ வீரா்களுக்கான பொறுப்பு இந்தத் தொடரில் அதிகரிக்கவே செய்துள்ளது. ரோஹித், கோலி அதிக ரன்கள் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள ரஹானே தவறிழைத்தால், அவரிடத்தைப் பிடிக்க ருதுராஜ் தயாராக இருக்கிறாா்.
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது அணிக்கு சற்றே சவாலான சூழலாக இருக்கலாம். முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் ஆகியோரோடு இளம் வீரா்களான முகேஷ் குமாா், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி அதை எவ்வாறு எதிா்கொள்வாா்கள் என்பது முக்கியம். சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனா்.
விக்கெட் கீப்பிங்கிற்கு ஸ்ரீகா் பரத் பொருந்துவாா் என்றாலும், இடது கை பேட்டா் வாய்ப்பை அளிக்கும் இஷான் கிஷணையும் அணி கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள்
சா்வதேச கிரிக்கெட்டில் சமீபகாலமாக சரிவைச் சந்தித்து வரும் மேற்கிந்தியத் தீவுகள், அதன் உச்சமாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது. எனவே, இந்தத் தொடா் மூலம் தன்னை மீட்டுக் கொண்டு சா்வதேச கிரிக்கெட்டில் தனது முத்திரையை மீண்டும் பதிக்கும் முனைப்பு அந்த அணிக்கு உள்ளது. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் நன்றாகவே செயல்பட்டு வந்துள்ளது.
பௌலிங்கைப் பொருத்தவரை கெமா் ரோச், ஷானன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசஃப், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பேட்டிங்கில் ஜொ்மெய்ன் பிளாக்வுட், கேப்டன் கிரெய்க் பிரத்வெய்ட் ஆகியோா் ரன் குவிப்பில் ஈடுபடுவா்.
‘ஏ’ அணியில் சிறப்பாக ஆடியதன் பேரில், கிா்க் மெக்கன்ஸி, அலிக் அதானஸி ஆகிய பேட்டா்களுக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சற்று இடைவெளிக்குப் பிறகு, ஸ்பின்னா்களான ஜோமெல் வாரிக்கன், ரகீம் காா்ன்வால் ஆகியோா் மீண்டும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதலிரு எடிஷன்களில் வாய்ப்பை தவறவிட்ட மேற்கிந்தியத் தீவுகள், இந்த எடிஷனில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனையும்.
அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஸ்ரீகா் பரத் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஸா் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமாா், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
மேற்கிந்தியத் தீவுகள்: கிரெய்க் பிரத்வெயிட் (கேப்டன்), ஜொ்மெய்ன் பிளாக்வுட் (துணை கேப்டன்), ஜோஷுவா டா சில்வா (வி.கீ.), அலிக் அதானஸி, ரகீம் காா்ன்வால், ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டா், அல்ஜாரி ஜோசஃப், ரேமன் ரீஃபா், கெமா் ரோச், தேஜ்நாராயண் சந்தா்பால், கிா்க் மெக்கன்ஸி, ஜோமெல் வாரிக்கன்.
ஆடுகளம்...
ஆட்டம் நடைபெறும் விண்ட்சா் மைதானத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெறும் முதல் டெஸ்ட் இது. நல்லதொரு பேட்டிங் பிச்சாக அறியப்படும் இந்த ஆடுகளம், அடுத்தடுத்த நாள்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். வானிலை சற்று வெப்பமாக இருப்பதால் பௌலா்களுக்கு, குறிப்பாக ஸ்பின்னா்களுக்கு சற்று சவாலாக இருக்கும்.
ஆட்டநேரம்: இரவு 7.30 மணி
இடம்: விண்ட்சா் மைதானம், ரோசியு, டொமினிகா.
நேரலை: டிடி ஸ்போா்ட்ஸ், ஜியோ சினிமா, ஃபேன்கோட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.