மீண்டும் நிகழுமா அந்த மாயாஜாலம்!

13-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கான போட்டி அட்டவணையை ஐஐசி வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மீண்டும் நிகழுமா அந்த மாயாஜாலம்!

13-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கான போட்டி அட்டவணையை ஐஐசி வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து, உலகம் முழுவதும் அதிகம்பேரால் ரசிக்கும் ஒரு விளையாட்டு திருவிழா என்றால் அது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் தான். அதிலும் இந்தவருடத்திற்கான உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சாணிக்கொம்பிலே இருக்கிறார்கள். காரணம் கடந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்றபோது அதனை வென்றது தான்.

இந்தியாவையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாதது, கிரிக்கெட்டையும் அதில் விளையாடும் வீரர்களை கடவுளாக வழிபடும் அளவிற்கு இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள். அதற்கு எத்தனையோ வீரர்கள் காரணமாக இருந்தாலும், காலத்தால் அழியாத கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்ற ஒற்றை மனிதன் தான் முழு முதல் காரணம். 

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டை தன் திறமையால் கட்டிபோட்டு வைத்திருந்த அந்த சாதனை மனிதருக்காக, 2011 உலக கோப்பையை வென்றுகாட்டுவோம் எனது சபதமிட்டு, அதை நிகழ்த்தியும் காட்டினார்கள் இந்திய வீரர்கள். 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது, அதன் பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனியின் படை அந்த சாதனையை செய்து காட்டியது. வான்கடே மைதானத்தில் தோனி அடித்த அந்த கடைசி சிக்சரையும், அதன் பிறகு வீரர்கள் சச்சினை தங்கள் தோள்களில் வைத்து  மைதானத்தைச் சுற்றிவந்த அந்த காட்சிகளையும் ஓவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் வாழ்நாள் உள்ளவரை நினைவில் வைத்திருப்பார்கள்.

இந்தியா ஐஐசி கோப்பைகளை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியை வழிநடத்தினாலும், தோனியும் அவர்கள் சகாக்களும் நிகழ்த்திக்காட்டிய அந்த மாயாஜாலத்தை, அதன் பிறகு யாராலும் நிகழ்த்த முடியவில்லை. 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு, இடைப்பட்ட இந்த பத்தாண்டுகளில் இந்திய அணி எத்தனையோ இருநாட்டுத் தொடர்களையும், முத்தரப்பு தொடர்களையும் வென்று இருந்தாலும், ஐஐசி கோப்பைகள் ஏனோ எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கடத்த இரு உலகக்கோப்பைகளிலும் அரை இறுதியுடன் வெளியேறியது, 2019 ஆம் ஆண்டு இந்தியா  நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட்டுடன் இந்திய அணி வெளியேறியபோது இந்தியாவே கண்ணீர் வடித்தது. ஏன் சமீபத்தில் கூட டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறி இருப்பதும், முக்கிய வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகி இருப்பதும், வீரர்களை தேர்வு செய்வதில் குளறுபடி போன்றவை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்திய அணி வீரர்களின் திறமைக்கு குறைவே இல்லை. அவர்கள் ஒருமித்து விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும்.

இந்த உலகக் கோப்பை இந்தியாவின் பல வீரர்களுக்கு கடைசி உலகக் கோப்பையாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு 34 வயதிற்கு மேல் ஆகிறது. அவர்கள் அடுத்த உலகக்கோப்பை வரை ஆடுவது சந்தேகம் தான். 

சமீபத்தில் உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியீட்டு நிகழ்வில் பேசிய சேவாக், "கடந்த முறை உலகக்கோப்பையை நாங்கள் சச்சினுக்காக விளையாடினோம். அவர் இருந்த இடத்தில் இப்போது விராட் கோலி இருக்கிறார். அவருக்காக இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அவர் எப்போதும் அணிக்காக 100 சதவிகிதத்திற்கு மேல் கொடுக்கிறார்" என் கூறினார்.

சச்சினுக்காக தோனி செய்தார். ஆனால் தோனிக்காக யாரும் செய்யவில்லை. அந்த தவற்றை  இந்த முறையும் செய்யக்கூடாது. விராட் கோலிக்காக இந்த முறை நிச்சயம் வென்றாக வேண்டும் என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

கபில் தேவிற்கும், தோனிக்கும் கிடைத்த அந்த கோப்பையை ஏந்தும் வாய்ப்பு, ரோஹித்துக்கும் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். லார்ட்ஸ் மைதானத்திலும், வான்கடே மைதானத்திலும் நடந்த அந்த காட்சி மீண்டும் ஒரு முறை  அகமதாபாத் மைதானத்தில் நிகழுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com