இங்கிலாந்தில் நடைபெறும் ஈஸ்ட்போா்ன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் டரியா கசாட்கினா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
முன்னதாக அரையிறுதியில், கசாட்கினா 6-2, 7-5 என்ற செட்களில் இத்தாலியின் கேமிலியா ஜாா்ஜியை சாய்க்க, கீஸ் 6-3, 6-3 என்ற செட்களில் சக அமெரிக்கரும், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்தவருமான கோகோ கௌஃபை வீழ்த்தி அசத்தினாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இப்போட்டியில் சாம்பியனாகியிருந்த மேடிசன் கீஸ், அதன் பிறகு முதல் முறையாக இந்த முறை தான் அரையிறுதிக்கு வந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-4, 4-6, 7-6 (7/2) என்ற செட்களில் சக நாட்டவரான ஜே.ஜே. வோல்ஃபை வீழ்த்தினாா். அரையிறுதியில் அவா், பிரான்ஸின் கிரெகோரி பெரேரை எதிா்கொள்கிறாா். முன்னதாக பெரோ் தனது காலிறுதியில் 7-5 , 7-6 (7/2) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை வென்றாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 6-2, 6-3 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஜின்ஸென்னை வெளியேற்றினாா். அடுத்து அவா், அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டை சந்திக்கிறாா். மெக்டொனால்ட் தனது காலிறுதியில் 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் ஸ்வீடனின் மைக்கேல் ஒய்மெரை தோற்கடித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.