டபிள்யூபிஎல் கேப்டன்களின் பட்டியல்!

டபிள்யூபிஎல் போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
மெக் லேனிங்
மெக் லேனிங்

இந்த வருடம் முதல் தொடங்கும் மகளிருக்கான இந்திய டி20 லீக் போட்டியான டபிள்யூபிஎல்-லில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டிக்காக வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

இந்நிலையில் மார்ச் 4 அன்று தொடங்கும் டபிள்யூபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இந்நிலையில் டபிள்யூபிஎல் போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். கடைசியாக தில்லி அணி தனது கேப்டனை இன்று அறிவித்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக் லேனிங் கேப்டனாகவும் ஜெமிமா ரோட்ரிகஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. ஆஸி. மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும் 2022 ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அதிக ஐசிசி பட்டங்களை (5) வென்ற கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனால் தில்லி அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

டபிள்யூபிஎல் 2023 போட்டியின் கேப்டன்கள் பட்டியல்

ஆர்சிபி - ஸ்மிருதி மந்தனா
உ.பி. வாரியர்ஸ் - அலிஸா ஹீலி
மும்பை இந்தியன்ஸ் - ஹர்மன்ப்ரீத் கெளர்
குஜராத் ஜெயண்ட்ஸ் - பெத் மூனி
தில்லி கேபிடல்ஸ் - மெக் லேனிங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com