ஐஎஸ்எல் போட்டியில் சர்ச்சை: நடுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதியில் வெளியேறிய கேரள வீரர்கள்!

ஐஎஸ்எல் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள வீரர்கள் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஎஸ்எல் போட்டியில் சர்ச்சை: நடுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதியில் வெளியேறிய கேரள வீரர்கள்!

ஐஎஸ்எல் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள வீரர்கள் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கால்பந்தில் பெரிய போட்டியாக திகழ்வது ஹீரோ இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியாகும். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கிய இப்போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  2022-23 போட்டியின் இறுதிச்சுற்று மாா்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. ஐஎஸ்எல் வரலாற்றில் முதல்முறையாக 6 அணிகள் லீக் கட்டத்தைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கு பல்வேறு அணிகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.

பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளுக்கிடையிலான நாக் அவுட் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் வெல்லும் அணி, அரையிறுதியில் மும்பைக்கு எதிராக விளையாடும். கடந்த 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, கடந்த வருடம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கேரள அணியை வீழ்த்தி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள கேரள அணி, 3 ஆட்டங்களில் தோற்றுள்ளது. 

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் 7-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ஃப்ரீ கிக் ஒன்று வழங்கப்பட்டது. இதை உடனடியாகப் பயன்படுத்திக்கொண்டு எதிரணி வீரர்கள் வரிசையில் நிற்பதற்கு முன்பு பந்தை அடித்து கோலாக மாற்றினார் சுனில் சேத்ரி. முறையான அவகாசம் வழங்காமல், வீரர்கள் வரிசையாக நிற்பதற்கு முன்பு கோல் அடிக்கப்பட்டதால் இதற்கு கேரள வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த கேரள அணியின் பயிற்சியாளர் இவான், அனைத்து வீரர்களையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார். இதையடுத்துத் திடலை விட்டு கேரள வீரர்கள் வெளியேறினார்கள். ஆட்டம் முடிவடைவதற்கு முன்பே கேரள வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் நேரம் முடியும் வரை மீண்டும் அவர்கள் திரும்பாததால் 120 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் முடிந்ததாக அறிவித்தார் நடுவர். இதனால் 1-0 என கேரள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு அணி. 

ஆட்டம் முடியும் முன்பே வெளியேறியதால் கேரள அணிக்கும் அதன் பயிற்சியாளருக்கும் ஐஎஸ்எஸ் போட்டியின் நிர்வாக அமைப்பு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com