டபிள்யுபிஎல் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி.
உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த உ.பி. அணி, 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. எல்லீஸ் பெர்ரி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வதாக பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து இப்போட்டியில் முதல் வெற்றியை அடைந்தது. 20 வயது கனிகா 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த ஆட்டத்துக்கு முன்பு ஆர்சிபி வீராங்கனைகளை ஊக்கம்படுத்தும் விதமாகப் பேசினார் விராட் கோலி. ஆர்சிபி ஆடவர் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி, வீராங்கனைகளுக்கு மத்தியில் பேசியதாவது:
கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறேன். இன்னும் ஐபிஎல் கோப்பையை நான் வெல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்வமாக இருப்பதை அது தடுத்துவிடாது. அதுதான் என்னால் செய்ய முடியும். ஜெயித்தால் சந்தோஷம். இல்லாவிட்டால், ஐபிஎல் போட்டியை வென்றால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்க மாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் தீவிரமாக விளையாடுவதால் தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் எங்களுக்கு உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்வோம் என்கிற உத்தரவாதத்தை நாம் ரசிகர்களுக்குத் தர முடியாது. ஆனால் 110 சதவீதம் உழைப்பைச் செலுத்துவோம் என்கிற உத்தரவாதத்தைத் தர முடியும் என்றார்.