ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரபசிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். பிரபசிம்ரன் 2 ரன்களிலும், தவான் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அதர்வா டைடு 19 ரன்களிலும், லியம் லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சாம் கரண் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. அதிரடியாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா 28 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாருக்கான் தனது பங்குக்கு அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சாம் கரண் 31 பந்துகளில் 49 ரன்களும், ஷாருக்கான் 23 பந்துகளில் 41 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.