இறுதி ஆட்டத்தில் இடம்: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
இறுதி ஆட்டத்தில் இடம்: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
Published on
Updated on
2 min read

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

லீக் சுற்றில் இரு அணிகளுமே 9 ஆட்டங்களில் தலா 7 வெற்றிகளுடன் 2 மற்றும் 3-ஆம் இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு வந்திருக்கின்றன. அந்த சுற்றில் இவை சந்தித்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

தென்னாப்பிரிக்காவை பொருத்தவரை, உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி கட்டத்தில் தடுமாறி வெளியேறிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. பங்கேற்ற 9 எடிஷன்களில் இதுவரை 4 முறை அரையிறுதி வரை முன்னேறி, அதில் தோல்வி கண்டு வெளியேறிய தென்னாப்பிரிக்கா, இந்த முறை அந்த வரலாற்றை திருத்தி எழுதும் முனைப்பில் இருக்கிறது.

அணியின் செயல்பாட்டை கணக்கில் கொண்டால், இந்தியாவுக்கு அடுத்தபடியாக லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 83 ரன்களுக்கு சுருண்டாலும், இலங்கைக்கு எதிராக 428 ரன்களைக் குவித்ததிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

சேஸிங் செய்த இரு ஆட்டங்களிலுமே தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றது என்பதால், டாஸை வென்று பேட்டிங் செய்தாலே அணிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஏனெனில், அணியின் பேட்டிங் பலமானதாகவே இருக்கிறது.

முதல் 6 பேட்டா்களில் 4 போ் சதம் அடித்திருக்கின்றனா். குவின்டன் டி காக் நடப்பு எடிஷனில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்க, ராஸி வான் டொ் தனது பங்கிற்கு விளாசுகிறாா். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டுகிறாா். எய்டன் மாா்க்ரம் கடைசி கட்டத்தில் ரன்கள் குவிக்கிறாா்.

பௌலிங்கில் மாா்கோ யான்சென், லுங்கி இங்கிடி ஆகியோா் வேகப்பந்துவீச்சிலும், கேசவ் மஹராஜ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோா் சுழற்பந்துவீச்சிலும் நம்பிக்கை அளிக்கின்றனா்.

மறுபுறம் ஆஸ்திரேலியா, 5 முறை கோப்பை வென்ற வெற்றிகரமான அணியாக இருக்கிறது. அதிலும் கடந்த 6 எடிஷன்களில் 4 முறை வாகை சூடியிருக்கிறது. இந்த எடிஷனின் தொடக்கம் மோசமானதாக அமைந்தாலும், அடுத்தடுத்து 7 வெற்றிகளைப் பெற்று, தன்னை மீண்டும் நிரூபித்தது ஆஸ்திரேலியா.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், கால் வலியையும் பொறுத்துக் கொண்டு, ஒரு காலை அசைக்காமலேயே இரட்டைச் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலம். அடுத்தடுத்து சதங்கள் விளாசிய டேவிட் வாா்னரும் டாப் ஆா்டரில் ரன்கள் குவிப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

பாதி போட்டி நிறைவடைந்த நிலையிலும், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் விளையாடி சிறப்பாக பங்களித்து வருகிறாா் டிராவிஸ் ஹெட். மிட்செல் மாா்ஷும் தென்னாப்பிரிக்க பௌலா்களுக்கு சவால் அளிக்க வாய்ப்புள்ளது. பௌலிங்கில், நடப்பு எடிஷனில் அதிக விக்கெட் சரித்தவராக இருக்கும் ஆடம் ஸாம்பா, தென்னாப்பிரிக்க பேட்டா்களை திணறடிக்கக் காத்திருக்கிறாா். மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் அவருக்குத் துணையாக விக்கெட்டுகள் வீழ்த்தி வருகின்றனா்.

நேருக்கு நோ்:

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 109 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவே 55 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 50-இல் வென்றிருக்க, 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை; 3 ஆட்டங்கள் ‘டை’ ஆகியிருக்கிறது. அதுவே, உலகக் கோப்பை போட்டிகளில் இவை 7 முறை சந்தித்திருக்க, இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. 1 ஆட்டம் ‘டை’ ஆனது.

ஆடுகளம்:

பொதுவாக, பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தைக் கொண்டது ஈடன் காா்டன் மைதானம். ஓவா்கள் கடந்து செல்ல, சுழற்பந்துவீச்சாளா்களும் ஆதிக்கம் செலுத்த இயலும். இதுவரை இங்கு 39 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகளே 23 முறை வென்றுள்ளன.

ஆஸி.யின் பலம் அறிவோம்

நாக்அவுட் ஆட்டங்களில் அதிக அனுபவமும், நம்பிக்கையும் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும், எங்கள் திறமை மீது நம்பிக்கை உள்ளது. இந்தப் போட்டியில் இதுவரை நாங்கள் முன்னேறி வருவதற்கு என்ன செய்தோமோ, அதையே இப்போதும் சரியாகச் செய்தால் வேண்டிய முடிவுகளை பெறுவோம். இம்முறை இறுதிக்கு முன்னேறுவோமென கணிக்கிறோம். இந்தக் கட்டத்தில் இயல்பாகவே ஒரு பதற்றம் இருக்கும். ஆனாலும், எங்கள் ஆட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது - டெம்பா பவுமா (தென்னாப்பிரிக்க கேப்டன்)

வரலாற்றை நம்பி இல்லை

இதற்கு முன் சாம்பியன் ஆகியிருந்தாலும், அந்த வரலாற்றை மனதில் கொண்டு விளையாட விரும்பவில்லை. அடிப்படையாக ஒரு வெற்றிக்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். தென்னாப்பிரிக்காவுடனான முந்தைய ஆட்டங்களின் அடிப்படையில் உத்திகள் வகுப்போம். தொடக்க நிலையிலான பின்னடைவிலிருந்து மீண்டதை அதிா்ஷ்டமாக உணா்கிறோம். அணியிலிருக்கும் வீரா்கள் தங்கள் பணியை உணா்ந்து, அதற்கேற்றவாறு செயல்படத் தொடங்கியுள்ளனா். உலகக் கோப்பையில் விளையாடிய வீரா்களின் அனுபவம் கை கொடுக்கும். அடுத்த சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலிய கேப்டன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com