ஜனநாயக அச்சுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியை இரண்டாக உடைத்துவிட்டு பாஜகவுடன் கைகோத்து ஆட்சியமைக்க உதவிய ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சட்டப் பேரவைத் தலைவர் ராகுல் நரவேகரிடம் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவினர்) அளித்த மனுவின் மீது அவர் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த மனுவை சட்டப் பேரவைத் தலைவர் ராகுல் நரவேகர் கிடப்பில் போட்டுவிட்டார். 
இதனால் உச்சநீதிமன்றத்தின் கதவை சிவசேனை (பாலாசாஹேப் தாக்கரே) பிரிவு தட்டியது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், டிசம்பர் 31-க்குள் சட்டப் பேரவைத் தலைவர் தனது முடிவை அறிவிக்க உத்தரவிட்டது. 
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜீத் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வர் பதவியைப் பெற்றார். எனவே, அஜீத் பவாருடன் சேர்ந்து கட்சியை உடைத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையையும், சட்டப் பேரவைத் தலைவர் கிடப்பில் போட்டுவிட்டார்.
இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. தேசியவாத காங்கிரஸின் மனு மீது ஜனவரி 31-க்குள் பேரவைத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகே இல்லாமல், வேறு இடத்தில் இடம் ஒதுக்கக் கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பரிசீலித்து முடிவு அறிவிப்பதில் காலதாமதம் நிலவுகிறது.
பேரவைத் தலைவர் பதவி என்பது இடைக்கால பிரிட்டிஷில் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டன் மன்னருடன் தங்கள் சார்பாக உரையாடுவதற்கு ஒருவர் தேவை என்பதால், பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) உறுப்பினர்கள், தங்களுக்குள் ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர்.
17-ஆம் நூற்றாண்டுவரை பேரவைத் தலைவர், மன்னரின் முகவராகவே கருதப்பட்டார். 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் நாடாளுமன்ற கீழவையின் பாரபட்சமற்ற தலைவராக அவர் செயல்படத் தொடங்கினார். நாடாளுமன்ற உரிமைகள், சிறப்புரிமைகள், அதன் கமிட்டிகள் மற்றும் உரிமைகளின் பாதுகாவலராக பேரவைத் தலைவர் திகழ்கிறார்.
இந்திய அரசமைப்பு சட்டத்தைப் பொருத்தவரை நாடாளுமன்றத்திலும் (அரசமைப்பு சட்டப் பிரிவு-93), மாநில சட்டப் பேரவைகளிலும் (பிரிவு-178)  பேரவைத் தலைவர், துணைத் தலைவர் என தலா இருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பேரவை அலுவல் பணிகள் மட்டுமல்லாமல், பண மசோதாவை தீர்மானிப்பது, அரசமைப்பு சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்கீழ், உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக முடிவு எடுப்பது என இரண்டு முக்கிய அதிகாரங்களை பேரவைத் தலைவர் பெற்றுள்ளார்.
பண மசோதாவைப் பொருத்தவரை அதை மாநிலங்களவை, சட்டமேலவைகளில் தாக்கல் செய்ய இயலாது. ஆகையால், அதைத் தீர்மானித்து நிறைவேற்றுவதில் பேரவைத் தலைவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதவிர அவையில் உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், அவர்களை இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் பேரவைத் தலைவருக்கு உள்ளது. ஆனால், இந்த அதிகாரத்தை அவர் பெரும்பாலான நேரங்களில் முறைகேடாகப் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயமும் எழுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் குறித்து விமர்சித்ததற்காக காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி இடைநீக்கம் செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதே கூட்டத்தொடரில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தேசிய அளவில் பேசுபொருளானது. ஆனால், அவர் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை நிலைக் குழுவுக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் அவைத் தலைவருக்கு உள்ளது. ஆனால், நிலைக்குழுவின் பரிசீலனை தேவைப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பல மசோதாக்கள், அக்குழுவைச் சென்றடைவதில்லை.
அரசமைப்பு சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்கீழ், உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் அவைத் தலைவருக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு யோசனையை முன்வைத்தது.
அதாவது கெய்ஷம் மேகச்சந்திர சிங் (எதிர்) மணிப்பூர் பேரவைத் தலைவர் வழக்கு விசாரணையின்போது, உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரத்தை அவைத் தலைவரிடம் இல்லாமல், நீதிபதி தலைமை வகிக்கும் சுதந்திரமான அமைப்பிடம் வழங்கலாம் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
நாடாளுமன்றத்தில் சில மசோதாக்களை பண மசோதாவாக அவைத் தலைவர் சான்றளித்ததை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பேரவைத் தலைவர் பதவி தொடங்கப்பட்ட பிரிட்டனில், ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட கட்சியிலிருந்து விலகிவிடுவார். அதுமுதல் அவர் பொதுவான நபராகவே அறியப்படுவார்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 10-ஆவது அட்டவணையிலும் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் அந்தப் பொறுப்புக்கு வந்ததும் கட்சியிலிருந்து விலக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. 
தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களில் அரசியல் கட்சியின் வேட்பாளராக இல்லாமல், ஓர் அவைத் தலைவர் என்ற முறையிலேயே வாக்கு சேகரிக்கிறார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலங்களில், அவருக்கு எதிராகக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்கிற மரபு பின்பற்றப்பட்டது.
அவைத் தலைவர்கள், நடுநிலை வகிப்பவர்களாக இல்லாமல் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் பிரதிநிதிகளாக செயல்படுவது என்பது வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இதுவும் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com