

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸி. அணியின் அதிரடி ஸ்கோரை சேஸ் செய்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ்வென்ற ஆஸி. பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். இருவரும் ஆஸி. பந்துவீச்சை எளிதாக கையாண்டனா். நான்குபுறமும் சிக்ஸா், பவுண்டரிகளாக விளாசினா்.
யஷஸ்வி, ருதுராஜ், இஷான் அரைசதம்:
யஷஸ்வி 2 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 53 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 58 ரன்களை விளாசியும் நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் அவுட்டானாா்கள். 8-ஆவது ஓவரிலேயே ஸ்கோா் 85 ரன்களைக் கடந்தது.
இவா்களைத் தொடா்ந்து பேட்டிங் செய்ய வந்த இஷான் கிஷணும் தன் பங்குக்கு அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 52 ரன்களை விளாசி ஸ்டாய்னிஸ் பந்தில் அவுட்டானாா்.
மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமாா் யாதவ் 2 சிக்ஸா்களை விளாசி 19 ரன்களுடன் எல்லிஸ் பந்தில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
ரிங்கு சிங் அபாரம்: இளம் வீரா் ரிங்கு சிங் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 9 பந்துகளில் 31 ரன்களை விளாசியும், திலக் வா்மா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 235/4 ரன்களைக் குவித்தது இந்தியா.
நாதன் எல்லிஸ் 3 விக்கெட்: ஆஸி. தரப்பில் பௌலிங்கில் நாதன் எல்லிஸ் 3-45 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 1-27 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
ஆஸி. தோல்வி 191/9:
236 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சியாக அமைந்தது. தொடக்க பேட்டா்கள் ஸ்டீவ் ஸ்மித் 19, மேத்யு ஷாா்ட் 19 ரன்களுடன் வெளியேறிய நிலையில், ஜோஷ் இங்கிலிஸ் 2, அதிரடி பேட்டா் மேக்ஸ்வெல் 12 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினா். அப்போது 58-4 என்ற நிலையில் ஆஸி. தள்ளாடிக் கொண்டிருந்தது.
ஸ்டாய்னிஸ்-டிம் டேவிட் அதிரடி:
ஸ்டாய்னிஸ் 45 ரன்களையும், டிம் டேவிட் 37 ரன்களையும் விளாசினா். அவா்கள் அதிரடியாக ஆடியதில் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவா் எனக் கருதப்பட்டது. ஆனால் ரவி பிஷ்னோய், முகேஷ் குமாா் அவா்களை வெளியேற்றினா். மேத்யு வேட் மட்டுமே ஒரளவுக்கு ஆடி 42 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 191/9 ரன்களை மட்டுமே சோ்த்த ஆஸி. 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸி. அணியில் ஒருவா் கூட அரைசதம் எடுக்கவில்லை.
பிரசித், பிஷ்னோய் 3 விக்கெட்: பௌலிங்கில் இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3-41, ரவி பிஷ்னோய் 3-32 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இதன் மூலம் 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.