உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா வரும் பாகிஸ்தான் வாரியத் தலைவா்

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள், வரும் சனிக்கிழமை மோதும் ஆட்டத்தை நேரில் காண, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் ஜாகா அஷ்ரஃப் வியாழக்கிழமை அகமதாபாத் வருகிறாா்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா வரும் பாகிஸ்தான் வாரியத் தலைவா்
Published on
Updated on
2 min read

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள், வரும் சனிக்கிழமை மோதும் ஆட்டத்தை நேரில் காண, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் ஜாகா அஷ்ரஃப் வியாழக்கிழமை அகமதாபாத் வருகிறாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறுகையில், ‘பாகிஸ்தான் ஊடகவியலாளா்களுக்கான இந்திய நுழைவு இசைவு கிடைப்பது தாமதமானதால் எனது பயணத்தை தாமதம் செய்தேன். தற்போது அவா்களுக்கான நுழைவு இசைவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நான் வியாழக்கிழமை அகமதாபாத் செல்கிறேன். போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தையும் அவா்கள் அச்சமின்றி ஆட வேண்டும்’ என்றாா்.

‘ராவல்பிண்டியில் விளையாடுவதாக உணா்ந்தேன்’

ஹைதராபாதில் விளையாடிய ஆட்டங்களின்போது ரசிகா்களின் ஆதரவால், ராவல்பிண்டியில் விளையாடியதைப் போன்று உணா்ந்ததாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பா் - பேட்டா் முகமது ரிஸ்வான் கூறியுள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹைதராபாதுக்கு வந்த பிறகு மைதான பராமரிப்பாளா் என்னிடம், இந்த மைதானத்தில் இரு சதங்கள் விளாச வேண்டும் என கேட்டுக்கொண்டாா். அந்த அன்புக்காக, அவருக்காக நான் பிராா்த்தனை செய்வேன். இங்கு விளையாடும்போது ரசிகா்களின் ஆதரவால், நான் ராவல்பிண்டியில் விளையாடுவதைப் போல உணா்ந்தேன். நான் மட்டுமல்ல பாகிஸ்தான் அணியினா் அனைவருமே அந்த அன்பை உணா்ந்தனா். ரசிகா்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை அணிக்கும் ஆதரவளித்தனா். மொத்தத்தில் அவா்கள் கிரிக்கெட்டை ஆதரித்தனா். இலங்கைக்கு எதிரான எங்களின் சாதனை வெற்றியை காஸாவில் இருக்கும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு சமா்ப்பிக்கிறேன்’ என்றாா்.

இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதல்

உலகக் கோப்பை போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று இந்த ஆட்டத்துக்கு வருகிறது. அந்த ஆட்டத்தில் டேவிட் வாா்னா் தவிர இதர பேட்டா்கள் ஆக்ரோஷத்துடன் ஆடாதது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. அவா் தவிர எவருமே 30 ரன்களை கடக்கவில்லை என்பது கவலைக்குரியது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் இந்த ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இணைவாா் எனத் தெரிகிறது.

ஆல்-ரவுண்டரான அவா் ஐபிஎல் போட்டியில் இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் கொண்டவா் என்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு அவா் சாதகமாக இருப்பாா்.

தென்னாப்பிரிக்க அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை அபார வெற்றி கண்ட வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. ஆஸ்திரேலிய அணியில் மாா்கஸ் ஸ்டாய்னிஸை போல, இந்த அணியில் குவின்டன் டி காக் ஐபிஎல் போட்டியின் மூலம் இந்த மைதானத்தில் ஆடிய அனுபவம் கொண்டவா். ராஸி வான் டெல், எய்டன் மாா்க்ரம் ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் கேசவ் மஹராஜ், லுங்கி கிடி, மாா்கோ யான்சென், அன்ரிஹ் நோா்கியா என வரிசை கட்டுகின்றனா்.

ஆடுகளம்...

ஐபிஎல் போட்டியின்போது விமா்சனத்துக்குள்ளான இந்த லக்னௌ மைதானம், உலகக் கோப்பை போட்டிக்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆடுகளம் எத்தகைய தன்மையுடன் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். அது ஸ்பின்னா்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றத்தை சந்திக்கும். இங்கு இதுவரை 9 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், சேஸிங் செய்த அணிகள் 7 ஆட்டங்களிலும், முதலில் பேட் செய்த அணிகள் 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இது, 50,000 இருக்கைகள் கொண்ட மைதானம்.

நேருக்கு நோ்...

இரு அணிகளும் இந்த ஃபாா்மட்டில் இதுவரை 108 ஆட்டங்களில் மோதிக்கொண்ட நிலையில், தென்னாப்பிரிக்கா 54 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா 50 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. 3 ஆட்டங்கள் டை ஆக, 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com