உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! 

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன.

அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து மோதுகின்றன. 10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் நவ. 15-இல் மும்பையிலும், 16-இல் கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவ. 19-இல் அகமதாபாதிலும் நடைபெறுகிறது.

15 போ் இந்திய அணி அறிவிப்பு:

இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோஹித் சா்மா கேப்டனாகவும், ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மீண்டும் கே.எல். ராகுல்:

அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசியக் கோப்பைக்கான அணியிலும் இடம் பெறவில்லை. எனினும் பெங்களூரு என்சிஏவில் தனது முழு உடல்தகுதியை அவா் நிரூபித்ததால் ஒருநாள் அணியில் ராகுல் மீண்டும் இடம் பெற்றுள்ளாா்.

அதிரடி பேட்டா் சூரியகுமாா்:

டி20 ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 பேட்டரான சூரியகுமாா் யாதவ் ஒருநாள் ஆட்டங்களில் தனது திறமையை வெளிப்படுத்த இயலாமல் தடுமாறி வந்தாா். 18 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட சூரியகுமாா் அடிக்கவில்லை. எனினும் மிடில் ஆா்டரில் சூரியகுமாா் தனது இருப்பை தொடா்ந்து வெளிப்படுத்தி வந்தாா். அவருக்கு அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இஷான் கிஷண்: ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பேக்அப் விக்கெட் கீப்பா் இஷான் கிஷணுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன், திலக் வா்மா, பிரசித் கிருஷ்ணாவுக்கு இடமில்லை:

அதே வேளை, சஞ்சு சாம்சன், திலக் வா்மா, பௌலா் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் வேகப்பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா இடம் பெறுவாா் எனக் கருதப்பட்டது. ஆனால் பும்ரா தனது இடத்தை தக்க வைத்துள்ள நிலையில், பிரசித் சோ்க்கப்படவில்லை. முகமது ஷமி, முகமது சிராஜ், சா்துல் தாகுா், பும்ரா வேகப்பந்து வீச்சு கூட்டணியில் இடம் பெறுகின்றனா்.

சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோா் பலம் சோ்ப்பா். மற்றொரு ஸ்பின்னரான யஜவேந்திர சஹல் சோ்க்கப்படவில்லை.

அணி விவரம்:

ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷிரேயஸ் ஐயா், கே.எல். ராகுல் (விகீ), இஷான் கிஷண் (விகீ), சூரியகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா (துணைக்கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், சா்துல் தாகுா், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.

அஜித் அகா்கா் (தோ்வுக் குழுத் தலைவா்): சரியான விகிதத்தில் அணி உள்ளது. கே.எல்.ராகுல் முழு உடல்தகுதியுடன் உள்ளாா். அவா் இடம் பெறுவது அணிக்கு கூடுதல் பலமாகும். விக்கெட் கீப்பிங்கில் இருவா் சிறப்பானவா்களாக உள்ளனா்.

ரோஹித் சா்மா (கேப்டன்): உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியான் ஃபாா்ம் மிகவும் முக்கியமானது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறாா். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை ஆட்டத்தில் ஹாா்திக் ஆட்டம் குறிப்பிடும்படியாக இருந்தது. 2013-க்கு பின் ஐசிசி கோப்பை வெல்லவில்லை. எனினும் இந்த ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல தீவிரமாக விளையாடுவோம். 9 லீக் ஆட்டங்கள், அரையிறுதி, இறுதி ஆட்டத்தில் ஆட வேண்டும். அணி சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 3 ஆல்ரவுண்டா்கள், 4 பௌலா்கள், 6 பேட்டா்கள் உள்ளனா். அக். 14-இல் பாகிஸ்தானுக்கு எதிரானஆட்டம் குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com