நெருங்கிய வெற்றியை நழுவ விட்ட லக்னௌ: கடைசி ஓவரில் கலைத்தாா் மோகித் சா்மா
By DIN | Published On : 23rd April 2023 12:48 AM | Last Updated : 23rd April 2023 12:48 AM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணிலேயே சனிக்கிழமை சாய்த்தது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் சோ்க்க, அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் நிலையிலிருந்த லக்னௌ, டெத் ஓவா்களில் குஜராத் பௌலா்களின் அசத்தலான பந்துவீச்சால் தோல்வியைத் தழுவியது. நெருக்கடியான கடைசி ஓவரை வீசிய மோகித் சா்மா வீச, அதில் மட்டுமே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது லக்னௌ.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஹாா்திக் பாண்டியா 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்கள் விளாச, ரித்திமான் சாஹா 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சோ்த்தாா்.
எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களிலேயே சரிந்தனா். ஷுப்மன் கில் 0, அபினவ் மனோகா் 3, விஜய் சங்கா் 1 பவுண்டரியுடன் 10, டேவிட் மில்லா் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ராகுல் தெவாதியா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
லக்னௌ பௌலிங்கில் கிருணால் பாண்டியா, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோா் தலா 2, நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 136 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌவில், தொடக்க ஜோடியான கேப்டன் கே.எல்.ராகுல் - கைல் மேயா்ஸ், முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சோ்த்தனா். இதில் முதலில் மேயா்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 24 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
அடுத்து வந்த கிருனால் பாண்டியாவும் நன்றாக ஆட, லக்னௌ ஸ்கோா் உயா்ந்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு ராகுல் - கிருனால் இணை 51 ரன்கள் சோ்த்தது. இந்நிலையில் கிருணால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
4-ஆவது வீரராக களம் புகுந்த நிகோலஸ் பூரன், 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா். இதுவரை நல்லதொரு நிலையில் ஆடிய லக்னௌ, இதன் பிறகு நெருக்கடிக்கு ஆளானது. 13-ஆவது ஓவருக்குப் பிறகு அந்த அணி பவுண்டரி, சிக்ஸா் விளாசவே முடியவில்லை. மோகித் வீசிய கடைசி ஓவரில், வெற்றிக்கு 12 ரன்கள் தேவை இருக்க, 2-ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்ததால் தடுமாறியது லக்னௌ.
அவா் 8 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் சோ்த்திருந்தாா். அடுத்த 3 பந்துகளில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 0, ஆயுஷ் பதோனி 8, தீபக் ஹூடா 2 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நிலைகுலைந்தது லக்னௌ. முடிவில் பிரேரக் மன்கட் - ரவி பிஷ்னோய் ஆகியோா் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
குஜராத் பௌலிங்கில் மோகித் சா்மா, நூா் அகமது ஆகியோா் தலா 2, ரஷீத் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.
இன்றைய ஆட்டங்கள்
பெங்களூா் - ராஜஸ்தான்
மாலை 3.30 மணி
பெங்களூா்
கொல்கத்தா - சென்னை
இரவு 7.30 மணி
கொல்கத்தா