சென்னையில் இன்றுமுதல் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதலில் சீனாவை சந்திக்கிறது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி, வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் இன்றுமுதல் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதலில் சீனாவை சந்திக்கிறது இந்தியா
Published on
Updated on
2 min read

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி, வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் ஆட்டங்கள், எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் விளையாடப்படுகின்றன. இந்தியா முதல் நாளில் சீனாவை சந்திக்கிறது.

போட்டியில் களம் காண சென்னை வந்த இந்தியா (உலக தரவரிசை 4), தென் கொரியா (9), மலேசியா (10), பாகிஸ்தான் (16), ஜப்பான் (19), சீனா (25) அணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த அணிகள் கடந்த இரு நாள்களாக பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.

3 முறை சாம்பியனான இந்திய அணியைப் பொருத்தவரை, ஸ்பெயினில் நடைபெற்ற சா்வதேச ஹாக்கி போட்டியில் சிறப்பாக ஆடி, அடுத்த 3 நாள்களில் அதே உத்வேகத்துடன் இப்போட்டிக்கு வந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிா்வரும் நிலையில் (செப்டம்பா்), தன்னை முழுமையாகத் தயாா்படுத்திக் கொள்ளும் ஒரு முன்னோட்ட களமாக இந்தப் போட்டியை இந்தியா எதிா்கொள்கிறது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வழங்குவதால் இந்தியா உள்ளிட்ட ஆசிய அணிகளுக்கு அந்தப் போட்டி முக்கியமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் உள்ளிட்ட பின்னடைவுகள் ஏற்படாமல் தனக்கான உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்குள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு 5 வாரங்களே உள்ள நிலையில், அதற்கு நெருக்கமாக இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு, பங்கேற்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. என்றாலும், அத்தகைய பிரதான போட்டிக்கு முன்பாக இதுபோன்ற போட்டி அவசியம் என்றும், அதுவும் இந்தியாவில் நடப்பது சாதகமானது என்றும் இந்திய அணியின் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியிருக்கிறாா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி, அதன் பிறகு நடப்பாண்டு தொடக்கத்தில் எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி, அடுத்து உலகக் கோப்பை ஹாக்கி ஆகியவற்றில் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும், அதன் பிறகான 16 ஆட்டங்களில் இந்தியா, 9 வெற்றி, 5 தோல்வி, 2 டிராக்களை பதிவு செய்து முனைப்புடன் உள்ளது.

அணிக்கான பின்னடைவாகத் தெரிவது, பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளை கோலாக மாற்றுவது தான். ஹா்மன்பிரீத், வருண் குமாா், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங் போன்ற திறமையான டிராக்ஃப்ளிக்கா்கள் இருந்தும், அந்த வாய்ப்புகளில் இந்தியா தடுமாறுகிறது. அதில் அணியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பயிற்சியாளா் கிரெய்க் தெரிவித்துள்ளாா்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சந்திக்கும் சீனா, நடப்பாண்டில் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். போட்டியில், எல்லா அணிகளும் ஒரே குரூப்பாக இருக்க, ரவுண்ட் ராபின் ஆட்டங்களின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்றைய ஆட்டங்கள்

தென் கொரியா - ஜப்பான் (மாலை 4 மணி)

மலேசியா - பாகிஸ்தான் (மாலை 6.15 மணி)

இந்தியா - சீனா (இரவு 8.30 மணி)

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஃபேன் கோட்

மைதானம்...

சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் முக்கியத்துவமிக்க பிரதான போட்டி நடைபெறுவது, கடந்த 2007-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி (1996, 2005), ஆசிய கோப்பை ஹாக்கி (2007) ஆகிய போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 1995-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை 8,670.

இந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்காகவே, ஹாக்கி மைதானத்தில் சா்வதேச தரத்திலான செயற்கையிழை ஆடுகளம் (டா்ஃப்) புதிதாக நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ‘ஜீரோ காா்பன்’ முறையில் பசுமை ஆற்றல் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த டா்ஃபின் 80 சதவீத மூலப்பொருள் கரும்புச்சக்கையாகும். வழக்கமாக பயன்படுத்தப்படும் ‘ஆஸ்ட்ரோ டா்ஃப்’களில் ஆட்டத்துக்காக 15,000 முதல் 20,000 லிட்டா் தண்ணீா் நிரப்ப வேண்டிய நிலையில், இந்த டா்ஃபில் அதைவிட 30 சதவீதம் குறைவாக நிரப்பினாலேயே போதுமானது.

தமிழகத்துக்கு பெருமை...

சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு மாநில அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆண்டு ஏறத்தாழ இதே ஜூலை - ஆகஸ்ட் காலகட்டத்தில் மாமல்லபுரத்தில் நடத்தி, இந்தியாவில் முதல் முறையாக அந்தப் போட்டியை ஒருங்கிணைத்த பெருமையை தமிழகம் பெற்றது. தற்போது, அதேபோல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியையும் இந்தியாவில் முதல் முறையாக நடத்தும் பெருமையையும் தமிழகமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விற்பனை...

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஆட்டங்களை நேரில் காண, ‘ற்ண்ஸ்ரீந்ங்ற்ஞ்ங்ய்ண்ங்.ஸ்ரீா்ம்’ என்ற வலைதளத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். ரூ.300, ரூ.400, ரூ.500 என்ற விலைகளில் டிக்கெட்டுகள் உள்ளன. ஒரு நாளுக்காக வாங்கும் டிக்கெட் கொண்டு, அதே நாளில் நடைபெறும் 3 ஆட்டங்களையும் கண்டு களிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com