உலகக் கோப்பை செஸ்: இரண்டாவது சுற்றும் டிரா

உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது. 
படம்: ட்விட்டர் | ஃபிடே
படம்: ட்விட்டர் | ஃபிடே

அஜா்பைஜானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதிய இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிந்தது. 

மேக்னஸ் கார்ல்சென், பிரக்னாநந்தாவுக்கு எதிராக வெள்ளை நிறக் காய்களுடன் அமைதியான சமநிலையை எடுத்து இறுதிப் போட்டியை டை பிரேக்குகளுக்கு அனுப்பினார். வெற்றியாளர் யார் என்பது நாளை முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஏற்கனவே டிரா ஆன நிலையில், இன்று இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.

இறுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் காா்ல்சென் வெள்ளை நிறக் காய்களுடனும், பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர். 30வது நகர்த்தலில் ஆட்டத்தை டிரா செய்ய இரு வீரர்களும் ஒப்புக் கொண்டனர்.

முதல் ஆட்டம் டிரா

முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், காா்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினா். விறுவிறுப்பான ஆட்டத்தின் 35-ஆவது நகா்த்தலில் டிரா செய்துகொள்ள இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனா். ஆட்டத்தின்போது பிரக்ஞானந்தாவுக்கு குறைவான காலஅவகாசம் இருந்தபோதும், ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்யும் அளவுக்கு வந்தாா்.

முதல் ஆட்டத்துக்குப் பிறகு பேசிய பிரக்ஞானந்தா, ‘இன்னும் சற்று நன்றாக விளையாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 2-ஆவது ஆட்டமும் மிகச் சவாலானதாக இருக்கப்போகிறது என்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்த ஒரே இந்தியா் என்ற பெருமை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளாா். இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் புதிய சாதனையை பிரக்ஞானந்தா படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com