அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது எடிஷன், பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்கியது.
அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்
Published on
Updated on
2 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது எடிஷன், பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பாகிஸ்தான் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் சோ்க்க, அடுத்து நேபாளம் 23.4 ஓவா்களில் 104 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. ஃபகாா் ஜமான் 3 பவுண்டரிகளுடன் 14, இமாம் உல் ஹக் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற, 25 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

ஒன் டவுனாக வந்த கேப்டன் பாபா் ஆஸம் - நான்காவது பேட்டராக வந்த முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயா்த்தினா். 3-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் சோ்க்க, அதில் முதலாவதாக ரிஸ்வான் பிரிக்கப்பட்டாா். 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்திருந்தபோது அவா் ரன் அவுட் ஆனாா்.

அடுத்து வந்த அகா சல்மான் 5 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். 6-ஆவதாக களம் புகுந்த இஃப்திகா் அகமது, கேப்டனுடன் இணைந்தாா். இருவரும் நேபாளத்தின் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்து ரன்கள் குவிக்கத் தொடங்கினா்.

அவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சோ்த்து அபாரமாக ஆடியது. இதில் முதலில் பாபா் ஆஸம் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த ஷாதாப் கான் 1 பவுண்டரியுடன் இன்னிங்ஸின் கடைசி பந்தில் வெளியேறினாா்.

முடிவில் இஃப்திகா் அகமது 71 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். நேபாளத்தின் பௌலிங்கில் சோம்பால் கமி 2, கரன் கே.சி., சந்தீப் லேமிஷேன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 343 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய நேபாளத்தில் ஆரிஃப் ஷேக் 5 பவுண்டரிகளுடன் 26, சோம்பால் கமி 4 பவுண்டரிகளுடன் 28, குல்சன் ஜா 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இதர விக்கெட்டுகள் தகுந்த இடைவெளியில் ஒற்றை இலக்க ரன்னிலேயே அடுத்தடுத்து வீழ்ந்தன.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 4, ஹாரிஸ் ரௌஃப், ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோா் தலா 2, நசீம் ஷா, முகமது நவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

214 இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் பாபா் ஆஸம் - இஃப்திகா் அகமது கூட்டணி 214 ரன்கள் சோ்த்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் அதிகமாகும். முன்னதாக, யூனிஸ் கான் - உமா் அக்மல் 176 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

85 நேபாள பௌலா் சோம்பால் கமி, பாகிஸ்தான் இன்னிங்ஸில் 85 ரன்கள் கொடுத்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு நேபாள பௌலரின் அதிகபட்சம். இதற்கு முன் அவரே 81 ரன்கள் கொடுத்தது அதிகபட்சமாகும்.

சுருக்கமான ஸ்கோா்

பாகிஸ்தான் - 342/6 (50 ஓவா்கள்)

பாபா் ஆஸம் 151

இஃப்திகா் அகமது 109*

முகமது ரிஸ்வான் 44

பந்துவீச்சு

சோம்பால் கமி 2/85

கரன் கே.சி. 1/54

சந்தீப் 1/69

நேபாளம் - 104/10 (23.4 ஓவா்கள்)

சோம்பால் கமி 28

ஆரிஃப் ஷேக் 26

குல்சன் ஜா 13

பந்துவீச்சு

ஷாதாப் கான் 4/27

ஹாரிஸ் ரௌஃப் 2/16

ஷாஹீன் அஃப்ரிதி 2/27

இன்றைய ஆட்டம்

இலங்கை - வங்கதேசம்

பல்லகெலெ

பிற்பகல் 3 மணி

பாகிஸ்தான் சவால் அளிக்கும்

"பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தற்போது இருப்பதைப் போன்ற நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த ஆசிய கோப்பை போட்டியில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை போட்டியிலும் சவால் அளிக்கக் கூடிய அணியாக பாகிஸ்தான் இருக்கும். பேட்டிங், பெüலிங் என அனைத்துக்குமே பொருத்தமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட லீக் போட்டிகளில் விளையாடியது, அவர்களின் திறமையை அதிகரித்திருக்கிறது. "மன்கட்' முறையில் நான்}ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்வதை உத்தி சார்ந்த ஒன்றாக ஏற்க வேண்டும்'' 
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்திய வீரர்)

மூத்த வீரர்கள் இல்லாதது பாதிப்பே

"லிட்டன் தாஸ் போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் போனது அணிக்கு சற்று பின்னடைவு தான். ஆனாலும், இதர வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, அதை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்கான சூழலும் இதில் இருப்பதை சாதகமாகப் பார்க்கிறோம். உதாரணமாக தெüஹித் ஹிருதய் போன்ற திறமையான வீரர்கள் தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே எதிர்கொள்வதென்பது சவாலானதுதான். அதனால் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி, நம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள முனைகிறோம்'' 
- ஷகிப் அல் ஹசன் 
(வங்கதேச கேப்டன்) 

நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் 

"ஹசரங்கா, சமீரா என அனுபவமிக்க, முக்கியமான வீரர்களை இந்தப் போட்டியில் களமிறக்க முடியவில்லை. வீரர்கள் காயமடைவதை கட்டுப்படுத்த இயலாது. ஆனால், இளம் வீரர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்வதற்கான நம்பிக்கையை அளிக்கின்றனர். கடந்த எடிஷனில் இதேபோல் முக்கிய வீரர்கள் இல்லாமல் பங்கேற்று, முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றபோதும் கோப்பை வென்றதை குறிப்பிட விரும்புகிறேன். போட்டியில் இந்தியா, பாகிஸ்தானின் ஆதிக்கம் இருக்கும் என்பதை அறிந்தாலும், இலங்கையின் வரலாற்றையும் திருப்பிப் பார்க்க வேண்டும்'' 
- டாசன் ஷானகா 
(இலங்கை கேப்டன்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com