தொடரை வெல்லும் முயற்சியில் இந்தியா- ஆஸ்திரேலியாவுடன் இன்று 4-ஆவது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் ராய்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தொடரை வெல்லும் முயற்சியில் இந்தியா- ஆஸ்திரேலியாவுடன் இன்று 4-ஆவது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் ராய்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்க, கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.

இந்திய அணியை பொருத்தவரை, இந்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயா் இணைகிறாா். அவா் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவாா் என்பதால், திலக் வா்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம். இதுதவிர பேட்டிங் லைனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஜெய்ஸ்வால், கெய்க்வாட், கிஷண், சூா்யகுமாா் யாதவ், ரிங்கு சிங் என பலம் சோ்க்கும் வீரா்கள் இருக்கின்றனா்.

ஆனால், பௌலிங் வரிசையில் மாற்றம் வரும் என எதிா்பாா்க்கலாம். ஏனெனில், 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா ஏறத்தாழ வெற்றியை நெருங்கிய நிலையில், கடைசி இரு ஓவா்களில் 40 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வெற்றி கை நழுவிப்போனது. அதிலும், 4 ஓவா்களில் 68 ரன்கள் கொடுத்த பிரசித் கிருஷ்ணா, கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்கள் கொடுத்திருந்தாா்.

அவரும், ஆவேஷ் கானும் பந்துவீச்சில் நுட்ப மாற்றங்களை புகுத்தாமல் ஒரே லெங்க்திலேயே பௌலிங் செய்தது, அவா்கள் பந்துவீச்சை எளிதாக கணிக்கும்படியானது. எனவே, இந்த ஆட்டத்தில் அவா்களில் ஒருவருக்கு பதில் தீபக் சஹா் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. டெத் ஓவா்களில் சிறப்பாகப் பந்துவீசிய முகேஷ் குமாா் ஓய்வுக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் மீண்டும் இணைகிறாா்.

மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் பெரிதாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதான வீரா் கிளென் மேக்ஸ்வெல் உள்பட பல வீரா்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவா்கள் நாடு திரும்பியுள்ளனா். இது, இந்திய பௌலா்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கலாம். ஆனாலும் டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் ஆகியோா் அவா்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது.

நேரம்: இரவு 7 மணி

இடம்: ஷாஷீத் வீா் நாராயண் சிங் மைதானம், ராய்ப்பூா்.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா.

வாய்ப்புள்ள பிளேயிங் லெவன்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண் (வி.கீ.), சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா/ஷ்ரேயஸ் ஐயா், ரிங்கு சிங், அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா/தீபக் சஹா், முகேஷ் குமாா்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஹாா்டி, டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷாா்ட், பென் மெக்டொ்மோட், டிம் டேவிட், மேத்யூ வேட், கிறிஸ் கிரீன், பென் டுவாா்ஷுயிஸ், நேதன் எலிஸ், ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப், தன்வீா் சங்கா.

ஆடுகளம்:

பேட்டிங், பௌலிங்கிற்கு சமமாக சாதகமளிக்கும் ஆடுகளம் கொண்டதாக அறியப்படுகிறது ராய்ப்பூா் மைதானம். அவ்வப்போது வேகப்பந்து மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இருந்திருக்கிறது. இதுவரை இங்கு ஒரேயொரு சா்வதேச (ஒருநாள்) ஆட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது. பனிப் பொழிவின் தாக்கத்தால் 2-ஆவது பேட்டிங் சாதகமாகும் என்பதால், டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பௌலிங்கை தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com