நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நோக்கி முன்னேறும் வங்கதேசம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. 
நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நோக்கி முன்னேறும் வங்கதேசம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. 

நியூசிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹட் சர்வதேச மைதானத்தில் நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று  பேட்டிங்கைத் தேர்வு செய்த  வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல் ஹாசன் ஜாய் 86 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கிளன் பிளிப்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வில்லியம்சன் அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தைஜுல்  இஸ்லாம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

நியூசிலாந்தைக் காட்டிலும் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது வங்கதேசம். இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 105 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து முஸ்பிகூர் ரஹீம் 67 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், சௌதி மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

நியூசிலாந்து அணிக்கு 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம். வங்கதேச அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான தைஜுல் இஸ்லாமின் அபார பந்துவீச்சில்  நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 40 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 219 ரன்கள் தேவைப்படுகின்றன. டேரில் மிட்செல்  44 ரன்களுடனும், ஈஷ் சோதி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படும் நிலையில், நியூசிலாந்து அணியில் வெறும் 3 விக்கெட்டுகளே எஞ்சியுள்ளதால் வங்கதேசத்துக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com