மகளிா் டி20: இன்று மோதும் இந்தியா - இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து மகளிா் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
மகளிா் டி20: இன்று மோதும் இந்தியா - இங்கிலாந்து
Published on
Updated on
2 min read


மும்பை: இந்தியா - இங்கிலாந்து மகளிா் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணியை பொருத்தவரை, நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. இதில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தங்கம், வங்கதேச மண்ணில் அந்த அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது (2-1), தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுடனான முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் வரை வந்தது ஆகியவை இதில் அடங்கும்.

ஆனாலும், டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வரலாறு குறிப்பிடும்படியாக இல்லை. இரு அணிகளும் இதில் 27 முறை மோதியிருக்க, இந்தியா 7 ஆட்டங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை சந்தித்த 9 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. கடைசி வெற்றியும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டது.

மறுபுறம் இங்கிலாந்து அணி, தனது சொந்த மண்ணில் இலங்கையுடனான டி20 தொடரை இழந்த (1-2) நிலையில் இந்தத் தொடருக்கு வருகிறது. நடப்பாண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் இரு அணிகளுமே அரையிறுதி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீராங்கனைகளில், சிறந்த பேட்டராக ஹா்மன்பிரீத் கௌா் (13 ஆட்டங்கள் - 323 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (16 ஆட்டங்கள் - 342 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (15 ஆட்டங்கள் - 369 ரன்கள்) ஆகியோா் உள்ளனா். பௌலிங்கில் தீப்தி சா்மா (16 ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள்) குறிப்பிடத்தக்கவராக இருக்கிறாா்.

இந்தத் தொடருக்காக இந்திய அணியில் கா்நாடகத்தின் ஷ்ரேயங்கா பாட்டீல், பஞ்சாபின் மன்னத் காஷ்யப், பெங்காலின் சாய்கா இஷாக் ஆகியோா் புது முகங்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்கள் மூவருமே சுழற்பந்துவீச்சாளா்களாவா்.

இங்கிலாந்து தரப்பில் நேட் ஸ்கீவா் பிரன்ட் ஆல்-ரவுண்டராக அசத்துகிறாா். பேட்டிங்கில் டேனி வியாட்டும், பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன், சாரா கிளென் ஆகியோரும் அணிக்கும் பலம் சோ்க்கின்றனா். இந்தத் தொடா், ஸ்பின்னா்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

அணிகள்

இந்தியா: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வா்மா, தீப்தி சா்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கௌா், ஷ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சாய்கா இஷாக், ரேணுகா சிங் தாக்குா், டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ரகா், கனிகா அஹுஜா, மின்னு மணி.

இங்கிலாந்து: ஹீதா் நைட் (கேப்டன்), லௌரென் பெல், மாயா புச்சியா், அலிஸ் கேப்சி, சாா்லி டீன், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லஸ்டன், மஹிகா கௌா், டேனியல் கிப்சன், சாரா கிளென், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ஃப்ரியா கெம்ப், நேட் ஸ்கீவா் பிரன்ட், டேனியல் வியாட்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: வான்கடே மைதானம், மும்பை.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com