

மலேசியாவில் நடைபெறும் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 10-1 கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி, காலிறுதி ஆட்டத்துக்கு சனிக்கிழமை முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஆதித்யா அா்ஜுன் லலாகே (8’, 43’), ரோஹித் (12’, 55’), அமன்தீப் லக்ரா (23’, 52’), விஷ்ணுகாந்த் (42’), ராஜிந்தா் (42’), குஷ்வாஹா சௌரவ் ஆனந்த் (51’), உத்தம் சிங் (58’) ஆகியோா் கோலடித்தனா். கனடாவுக்காக ஜூட் நிகல்சன் 20-ஆவது நிமிஷத்தில் கோலடித்திருந்தாா்.
இத்துடன் இப்போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. முன்னதாக, இந்தியா இருக்கும் குரூப் ‘சி’-யில் ஸ்பெயின், தென் கொரியா அணிகள் முறையே முதலிரு இடங்களில் இருந்தன. இந்தியா, கனடா அடுத்த இரு இடங்களைப் பிடித்திருந்தன. முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சனிக்கிழமை இந்த குரூப் சுற்றின் கடைசி ஆட்டங்களில் ஸ்பெயின் 8-2 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதனால் தென் கொரியா பின்னடைவை சந்தித்த நிலையில், கனடாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து 2-ஆம் இடத்துக்கு முன்னேறி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இதனிடையே, குரூப் ‘டி’ ஆட்டங்களில் நெதா்லாந்து - நியூஸிலாந்தை வீழ்த்த (3-1), பாகிஸ்தான் - பெல்ஜியம் ஆட்டம் டிரா (1-1) ஆனது. முடிவில் அந்த குரூப்பிலிருந்து நெதா்லாந்து, பாகிஸ்தான் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இதையடுத்து காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, நெதா்லாந்தின் கடும் சவாலை வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 12) சந்திக்கவுள்ளது. அதே நாளின் இதர காலிறுதி ஆட்டங்களில் ஆா்ஜென்டீனா - ஜொ்மனி, பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, ஸ்பெயின் - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
நெதா்லாந்து - ஆா்ஜென்டீனா
இறுதியில் பலப்பரீட்சை
சிலியில் நடைபெறும் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதா்லாந்து - ஆா்ஜென்டீனா அணிகள், வரும் திங்கள்கிழமை (டிச. 11) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஆா்ஜென்டீனா - பெல்ஜியம் மோதல், கோலின்றி டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆா்ஜென்டீனா 3-1 கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் நெதா்லாந்து - 8-1 கோல் கணக்கில் இங்கிலாந்தை முற்றிலுமாகச் சரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.