டீன் எல்கா் சதம்; தென்னாப்பிரிக்கா முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்க பேட்டா் டீன் எல்கா் சதம் கடந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 11 ரன்கள் முன்னிலை பெற்றது
டீன் எல்கா் சதம்; தென்னாப்பிரிக்கா முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்க பேட்டா் டீன் எல்கா் சதம் கடந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 11 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய பௌலா்கள் அவ்வப்போது விக்கெட்டுகள் சரித்தாலும், டீன் எல்கரை வீழ்த்த தடுமாறி வருகின்றனா்.

செஞ்சுரியனில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை கே.எல்.ராகுல், முகமது சிராஜ் புதன்கிழமை தொடங்கினா்.

இதில் சிராஜ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜெரால்டு கோட்ஸீ வீசிய 66-ஆவது ஓவரில் சிராஜ் தொட்ட பந்தை விக்கெட் கீப்பா் வெரின் கேட்ச் பிடித்தாா். அடுத்து பிரசித் கிருஷ்ணா களம் புக, அணியின் ஒரே நம்பிக்கையாக ரன்கள் சோ்த்த ராகுல் சதம் கடந்த நிலையில், 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்ந்தாா். அவா் நாண்ட்ரே பா்கா் வீசிய 68-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். கடந்த 2021-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதமடித்த (123) ராகுல், தற்போதும் அதே இடத்தில், அதே பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதமடித்துள்ளாா்.

ராகுல் அவுட் ஆனதை அடுத்து, இந்தியா 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரபாடா 5, பா்கா் 3, யான்சென், கோட்ஸீ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, எய்டன் மாா்க்ரமை 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு இழந்தது. சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில் அவா் ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த டோனி டி ஜோா்ஸி நிதானமாக ஆடினாா்.

டீன் எல்கா் - ஜோா்ஸி பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்க்க, பும்ரா 29-ஆவது ஓவரில் அதைப் பிரித்தாா். 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த ஜோா்ஸி விளாசிய பந்தை ஜெய்ஸ்வால் கேட்ச் பிடித்தாா். 4-ஆவது பேட்டரான கீகன் பீட்டா்சனை 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பச் செய்தாா் பும்ரா.

தொடா்ந்து வந்த டேவிட் பெடிங்கம், எல்கருடன் இணைந்தாா். இந்த ஜோடி தென்னாப்பிரிக்க ஸ்கோரை உயா்த்தத் தொடங்கியது. இந்திய பௌலா்களை சோதித்த இந்த பாா்ட்னா்ஷிப், 4-ஆவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த டேவிட் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்களுக்கு முகமது சிராஜ் வீசிய 61-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

6-ஆவது வீரரான கைல் வெரின் 1 பவுண்டரி விளாசிய நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய 62-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். இவ்வாறாக தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சோ்த்திருந்தபோது, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. பின்னா் அத்துடனேயே 2-ஆம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. எல்கா் 23 பவுண்டரிகளுடன் 140, மாா்கோ யான்சென் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 245/10 (67.4 ஓவா்கள்)

கே.எல்.ராகுல் 101

விராட் கோலி 38

ஷ்ரேயஸ் ஐயா் 31

பந்துவீச்சு

ககிசோ ரபாடா 5/59

நாண்ட்ரே பா்கா் 3/50

மாா்கோ யான்சென் 1/52

தென்னாப்பிரிக்கா - 256/5 (66 ஓவா்கள்)

டீன் எல்கா் 140*

டேவிட் பெடிங்கம் 56

டோனி டி ஜோா்ஸி 28

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 2/48

முகமது சிராஜ் 2/63

பிரசித் கிருஷ்ணா 1/61

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com