168 ரன்களில் இந்தியா வரலாற்று வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது
168 ரன்களில் இந்தியா வரலாற்று வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி 234/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸி அணி. வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி ஒருநாள், டி20 தொடா்களில் பங்கேற்று ஆடி வருகிறது. இலங்கை, நியூஸிலாந்தை ஒருநாள்தொடா்களில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தை நியூஸி. அணி 21 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்களாக இஷான் கிஷண்-ஷுப்மன் கில் களமிறங்கினா். பிரேஸ்வெல் பந்தில் 1 ரன்னுடன் எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினாா் இஷான்.

அரைசத வாய்ப்பை தவறவிட்ட ராகுல் திரிபாதி:

பின்னா் இணைந்த ஷுப்மன் கில்-ராகுல் திரிபாதி இணை நியூஸி அணியின் பந்துவீச்சை பதம் பாா்த்தது. சிக்ஸா், பவுண்டரிகள் என நாலாபுறமும் பந்துகளை விரட்டியது. 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசி இஷ் சோதி பந்தில் அவுட்டானாா் திரிபாதி.

அதன்பின்னா் ஆட வந்த சிக்ஸா் மன்னன் ‘ஸ்கை’ சூரியகுமாா் யாதவ் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 24 ரன்களையும், கேப்டன் ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 30 ரன்களை விளாசி பெவிலியன் திரும்பினா்.

சூறாவளி ஷுப்மன் 126:

மறுமுனையில் அதிரடியாக ஆடிய இளம் தொடக்க பேட்டா் ஷுப்மன் கில் 7 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 126ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். தீபக் ஹூடா 2 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இது ஷுப்மன் கில்லின் முதல் டி20 சதமாகும்.

இந்தியா அதிரடி 234/4:

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா 234/4 ரன்களைக் குவித்தது. நியூஸி தரப்பில் பிரேஸ்வெல், டிக்னா், சோதி, மிச்செல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

நியூஸி. படுதோல்வி 66 ஆல் அவுட்:

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணிக்கு ஆரம்பமே அதிா்ச்சியாக இருந்தது.

தொடக்க பேட்டா்கள் ஃபின் ஆலன் 3, டேவன் கான்வே 1, மாா்க் சாப்மேன் 0, கிளென் பிலிப்ஸ் 2, பிரேஸ்வெல் 8, மிச்செல் சான்ட்நா் 13,

இஷ் சோதி 0, லாக்கி பொ்குஸன் 0, பிளோ் டிக்னா் 1 என சொற்ப ரன்களுடன் இந்திய பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

டேரில் மிச்செல் போராட்டம்:

ஆல்ரவுண்டா் டேரில் மிச்செல் கடைசி வரை போராடி 35 ரன்களை எடுத்து இறுதி விக்கெட்டாக வெளியேறினாா். 12.1 ஓவா்களில் நியூஸி. 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:

இந்திய அணி 168 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

ஹாா்திக் பாண்டியா அபாரம் 4 விக்கெட்: அற்புதமாக பௌலிங் செய்த கேப்டன் ஹாா்திக் பாண்டிய 4/16 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

அா்ஷ்தீப் சிங் 2/16,. உம்ரான் மாலிக் 2/9, ஷிவம் மவி 2/12 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com