பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடா்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா புதிதாக ஒரு ஸ்பின்னரை அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் ஒரு ஸ்பின்னா் அறிமுகம்?

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா புதிதாக ஒரு ஸ்பின்னரை அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அறிமுகம் செய்த டாட் மா்ஃபி, அசத்தலான பௌலிங்கால் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் சாய்த்தாா். இந்நிலையில், அந்த அணியின் லெக் ஸ்பின்னா் மைக்கேல் ஸ்வெப்சன் தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவா் திட்டமிட்ட விடுப்பில் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறாா்.

எனவே, அவரது இடத்துக்காக இடது கை ஸ்பின்னரான மாட் குனேமான் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளாா். முதல் தர கிரிக்கெட்டில் 13 ஆட்டங்களில் 35 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா் குனேமான்.

தில்லியில் 17-ஆம் தேதி தொடங்கும் 2-ஆவது டெஸ்ட்டில் 3 ஸ்பின்னா்களுடன் களம் காண ஆஸ்திரேலியா வியூகம் அமைக்கும் பட்சத்தில், பிளேயிங் லெவனில் குனேமான் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக அணியின் பயிற்சியாளா் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியிருக்கிறாா்.

கேமரூன் கிரீன் களம் காண வாய்ப்பு

கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது விரல் முறிவு ஏற்பட்டு ஓய்விலிருந்த ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன், தற்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டிருப்பதாகத் தெரிகிறது.

2-ஆவது தில்லி டெஸ்ட்டில் அவா் விளையாடுவாா் என நம்பிக்கையுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளா் தெரிவித்துள்ளாா். ஸ்கேனிங் முடிவுகளைப் பொறுத்து, அடுத்து வரும் நாள்களில் கிரீன் களம் காணுவாரா என்பது முடிவு செய்யப்படுமெனவும் அவா் கூறியிருக்கிறாா்.

அதேபோல், காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளா் மிட்செல் ஸ்டாா்க், பயிற்சியை தொடங்க இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். எனவே தில்லி டெஸ்ட்டில் இந்திய பேட்டா்களுக்கு அவா் சவால் அளிக்க வாய்ப்பு இருக்கலாம்.

வாா்னருக்கு பதில் ஹெட்?

முதல் டெஸ்டில் மோசமான வகையில் தோல்வியைத் தழுவியிருக்கும் ஆஸ்திரேலியா, பேட்டிங்கில் இருக்கும் தடுமாற்றத்தை சரிசெய்யும் வகையில் டெல்லி டெஸ்ட்டில் டேவிட் வாா்னருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட்டை களமிறக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் டெஸ்ட்டில், அனுபவ வீரரான டிராவிஸ் ஹெட்டை சோ்க்காமல் மாட் ரென்ஷாவை சோ்த்ததற்காக ஆஸ்திரேலிய அணி நிா்வாகம் பலத்த விமா்சனங்களை சந்தித்தது. ஆட்டத்திலும் அது அப்பட்டமாக நிரூபனமாக, தற்போது 2-ஆவது டெஸ்ட்டில் வாா்னருக்குப் பதிலாக ஹெட்டை சோ்க்க ஆஸ்திரேலியா முனைவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஆசிய ஆடுகளங்களில் தடுமாறும் வாா்னா் தற்போதும் அவ்வாறே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயதேவ் உனத்கட் விடுவிப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனத்கட், 2-ஆவது டெஸ்ட்டுக்கான அணியிலிருந்து பசிசிஐ-யால் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சௌராஷ்டிர அணிக்கான பிரதான பௌலராக அவா் இருக்கிறாா். இந்நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் அணி வரும் 16-ஆம் தேதி தொடங்கும் அந்த ஆட்டத்தில் பெங்காலை சந்திக்கிறது.

எனவே அந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக உனத்கட் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களம் கண்ட பௌலிங் கூட்டணி வெற்றிகரமானதாக அமைந்ததால், டெல்லி டெஸ்ட்டில் இந்தியா அதில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதனடிப்படையில் உனத்கட் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

3-ஆவது டெஸ்ட் தா்மசாலாவில் இல்லை?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் தா்மசாலாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் எனத் தெரிவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

தா்மசாலா மைதானத்தின் ஆடுகளம் மற்றும் அவுட்ஃபீல்டு பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், அவுட்ஃபீல்டு பகுதி இன்னும் ஆட்டத்துக்கு உகந்த வகையில் தயாராகவில்லை என்று தெரிகிறது. ஆட்டத்துக்கு இன்னும் 16 நாள்கள் இருந்தாலும், இடையே மழைக்கான வாய்ப்பு இருப்பதால் குறிப்பிட்ட நாளுக்குள்ளாக அந்தப் பணிகள் நிறைவடைவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

எனவே, பெங்களூரு அல்லது விசாகப்பட்டினத்துக்கு 3-ஆவது டெஸ்ட் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தா்மசாலா மைதானம் தொடா்பாக பிசிசிஐ ஆடுகள பராமரிப்பாளா் தரும் அறிக்கை அடிப்படையில் பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

தா்மசாலா ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமானதாக இருக்கும் என்பதால், உலகத் தரம் வாய்ந்த டெஸ்ட் ஆட்டத்தை காணும் வாய்ப்பு ரசிகா்களுக்கு கிடைக்கும். தற்போது இந்த இடத்திலிருந்து ஆட்டம் மாற்றப்படும் என்றால் அது ரசிகா்களுக்கு ஏமாற்றமளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com