டபிள்யூபிஎல் ஏலம்: ஏமாற்றமடைந்த தமிழக வீராங்கனைகள்!

டபிள்யூபிஎல் ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீராங்கனைகளை மட்டுமே அணிகள் தேர்வு செய்துள்ளன. 
ஹேமலதா (படம் - www.instagram.com/dayahema_/)
ஹேமலதா (படம் - www.instagram.com/dayahema_/)

டபிள்யூபிஎல் ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீராங்கனைகளை மட்டுமே அணிகள் தேர்வு செய்துள்ளன. 

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

இந்நிலையில் நேற்றைய ஏலத்தில் ரயில்வே, பெங்கால் ஆகிய உள்ளூர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் அதிகளவில் தேர்வாகியுள்ளார்கள். 

உள்ளூர் அணிகள் வாரியாக ஏலத்தில் தேர்வான வீராங்கனைகள்

10 - ரயில்வே 
6 - பெங்கால் 
5 - பஞ்சாப்
4 - மும்பை
3 - தில்லி, கர்நாடகம் 
2 - உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், விதர்பா, பரோடா, ஆந்திரா, நாகாலாந்து, ஹிமாசலப் பிரதேசம் 
1 - தமிழ்நாடு, ஹரியானா, ஹைதராபாத், அஸ்ஸாம்,  கேரளம், உத்தரகண்ட், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட், ராஜஸ்தான் 

இந்த ஏலத்தில் தமிழ்நாடு சார்பாக 9 வீராங்கனைகள் பங்கேற்றார்கள். மூத்த வீராங்கனை திருஷ் காமினி, நிரஞ்சனா நாகராஜன், அபர்ணா மொண்டல், கீர்த்தனா பாலகிருஷ்ணன், ஆர்ஷி செளத்ரி, நேத்ரா ஐயர், எம்.எஸ். ஐஸ்வர்யா, அனுஷா சுந்தரேசன், ரம்யாஸ்ரீ பிரசாத் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்திருந்த 9 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றதில் அபர்ணா மட்டுமே தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான டி. ஹேமலதாவும் ஏலத்தில் தேர்வாகியுள்ளார். ஹேமலதா, இந்திய அணிக்காக 9 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஹேமலாதாவை குஜராத் அணி ரூ. 30 லட்சத்துக்கும் அபர்ணாவை தில்லி அணி ரூ. 10 லட்சத்துக்கும் தேர்வு செய்துள்ளன.  

உள்ளூர் போட்டிகளில் ரயில்வே அணிக்காக ஹேமலதாவும் தமிழக அணிக்காக அபர்ணாவும் விளையாடி வருகிறார்கள். அபர்ணா, கடந்த வருடம் வரை பெங்கால் அணிக்காக விளையாடி வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com