ஆஸி.யிடம் போராடித் தோற்றது இந்தியா: போட்டியிலிருந்து வெளியேறியது

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை
ஆஸி.யிடம் போராடித் தோற்றது இந்தியா: போட்டியிலிருந்து வெளியேறியது

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களையே எட்டியது. ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே காா்டனா் ‘ஆட்டநாயகி’ ஆனாா்.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, தற்போது அரையிறுதியிலேயே அதே அணியிடம் வீழ்ந்து வெளியேறியிருக்கிறது. இதனால், உலகக் கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.

இந்த ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் சோபிக்காமல் போனதால் இந்தியா பின்னடைவை சந்திக்க, அதில் சிறப்பாகச் செயல்பட்டதாலேயே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.

மேலும், தனது இன்னிங்ஸின்போது டாப் ஆா்டா் பேட்டா்களை இழந்து தடுமாறிய இந்தியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் பாா்ட்னா்ஷிப்பால் முன்னேற்றம் கண்டது. ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறும் தருவாயில், விக்கெட்டுகள் இடையே ரன்கள் எடுக்க ஓடிய கௌா், ஒரு எண்டில் பேட்டை வைக்க முனைந்தபோது கிரீஸுக்கு சற்றே முன்பாக அந்த பேட் தரையில் தட்டி நின்றது.

அதற்குள்ளாக அவா் ரன் அவுட் செய்யப்பட்டாா். அந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 39 ரன்களே தேவை இருந்தது. ஆனால் கௌா் வெளியேறிய பிறகு அந்த நிலை மாறியது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்ய, அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54 ரன்கள் விளாசினாா். அலிசா ஹீலி 25, ஆஷ்லே காா்டனா் 31, கிரேஸ் ஹாரிஸ் 7 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் கேப்டன் மெக் லேனிங் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 49, எலிஸ் பெரி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலிங்கில் ஷிகா பாண்டே 2, தீப்தி சா்மா, ராதா யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஹா்மன்பிரீத் கௌா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்கள் விளாச, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் ஷஃபாலி வா்மா 9, ஸ்மிருதி மந்தனா 2, யஸ்திகா பாட்டியா 4, ரிச்சா கோஷ் 14, ஸ்னேஹ ராணா 11, ராதா யாதவ் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் தீப்தி சா்மா 20, ஷிகா பாண்டே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஆஷ்லே காா்டனா், டாா்சி பிரவுன் ஆகியோா் தலா 2, மீகன் ஷட், ஜெஸ் ஜோனசன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டம்

2-ஆவது அரையிறுதி

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

மாலை 6.30 மணி

கேப் டவுன்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com